குளுவாங்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த குளுவாங் நகர உயர்நிலைப் பள்ளி வளாகம் ஒன்றில் காணப்பட்ட முதலைக் குட்டியைத் தீயணைப்பு, மீட்புத் துறையினர் பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (செப்டம்பர் 6) காலை பிடிபட்ட அந்த முதலைக் குட்டி, 1.2 மீட்டர் நீளமும் ஏறத்தாழ 6 கிலோ எடையும் கொண்டது என்று கூறப்பட்டது.
ரெங்கம் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு அப்பள்ளிக்கு அனுப்பப்பட்டதாக நிலையத் தலைவர் முகமது நிசார் மம்முன் கூறினார்.
பள்ளியின் பாதுகாப்பு ஊழியர் முதலைக் குட்டியைப் பார்த்ததும் உடனடியாக ஆசிரியர் ஒருவரிடம் கூறியதாகவும் அந்த ஆசிரியர் 8.15 மணிக்குத் தங்களுக்குத் தகவல் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் அது எங்கிருந்து வந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர். நல்லவேளையாக வாரயிறுதி நாள் என்பதால் பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை என்பதை அவர் சுட்டினார்.
சனிக்கிழமை காலை 8.35 மணிக்கு அது பிடிபட்டதாகவும் பள்ளி வளாகம் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த முதலைக் குட்டி தற்காலிகமாக தீயணைப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு, தேசியப் பூங்காக் கழகத்தினரிடம் அது பின்னர் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

