தாக்குதல் நடத்தப்படக்கூடும் எனக் குடிமக்களுக்கு பஹ்ரேன் எச்சரிக்கை

தாக்குதல் நடத்தப்படக்கூடும் எனக் குடிமக்களுக்கு பஹ்ரேன் எச்சரிக்கை

படம்: ராய்ட்டர்ஸ்

15 Nov 2026 - 6:21 pm

2 mins read

மனாமா: ஏறத்தாழ ஒன்பது மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் உடன்பாடு குறித்து நிச்சயமற்ற நிலை நிலவும் சூழலில், மத்திய கிழக்கு நாடான பஹ்ரேனில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என இரண்டு முறை ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 17) பஹ்ரேன் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு பஹ்ரேன் வெளியிடும் முதல் எச்சரிக்கைகள் இவையாகும்.

அமெரிக்காவின் விரோதப் போக்கிலான நடவடிக்கைகளுக்கு பதிலடியாகப் பஹ்ரேனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் காவல்படை தெரிவித்துள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவித்தது.

பஹ்ரேனில் உள்ள அல்-ரிஃபா ஹெலிகாப்டர் தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க வான்வழித் தற்காப்பு ரேடார் கருவியை இலக்காகக் கொண்டு ஆறு ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிப் படை கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அல்லது பஹ்ரேன் அதிகாரிகளிடமிருந்து உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவின் தலைமையகத்தைக் கொண்டுள்ள பஹ்ரேன், குடிமக்களும் குடியிருப்பாளர்களும் அமைதி காக்குமாறும் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இது குறித்துக் கூடுதல் விவரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போர், பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவியது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசதந்திர முயற்சிகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத போதிலும், அமெரிக்காவும் ஈரானும் நேரடித் தாக்குதல்களைத் தவிர்த்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்