பாலி வெள்ளம்: வெளியேற்றப்பட்ட சுற்றுப்பயணிகள்

பாலி வெள்ளம்: வெளியேற்றப்பட்ட சுற்றுப்பயணிகள்

2 mins read
ad74796f-47ec-4269-8c01-d348947d9112
பாடுங் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் போன்ற இடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் சுற்றுப்பயணிகள் சிலர் ரப்பர் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி

டென்பசார்: இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பாலித் தீவின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுப்பயணிகள் பலர் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றதாகச் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை (பிப்ரவரி 23) பிற்பகுதியிலிருந்து பெய்த கனமழையால் பாலியில் உள்ள பல மாவட்டங்களிலும் அதன் தலைநகரான டென்பசாரிலும் வெள்ளம் ஏற்பட்டதாக இந்தோனீசியப் பேரிடர் நிர்வாக அமைப்பின் மூத்த அதிகாரி கெடே அகுங் தேஜா பூசண யத்ன்யா தெரிவித்தார்.

வெள்ளத்தினால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

பாடுங் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் போன்ற இடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் சுற்றுப்பயணிகள் சிலர் ரப்பர் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

“நாங்கள் பாலி விலங்கியல் தோட்டத்தைப் பார்க்க வந்தோம். யானைகளைப் பார்க்க முயன்றோம், ஆனால் வெள்ளம் காரணமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை,” என்று மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 28 வயது பிரியானா பாலாசியோஸ் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஏறத்தாழ 30 வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் அவர்களில் சிலர் வேறு ஹோட்டல்களுக்கு மாறியதாகவும் அல்லது பின்னர் தங்களது தங்குமிடங்களுக்குத் திரும்பியதாகவும் டாக்டர் கெடே கூறினார்.

ஏறத்தாழ 350 பேர் உயர்ந்து வந்த வெள்ளநீருக்கு மத்தியில் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். நீர் வடிந்த பிறகு பெரும்பாலானோர் தங்களது வீடுகளுக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக பாலி விமான நிலையத்திற்கு வரவேண்டிய இரண்டு அனைத்துலக விமானங்கள் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 23) திருப்பிவிடப்பட்டன. மேலும் அங்கிருந்து புறப்பட வேண்டிய மூன்று விமானங்கள் தாமதமானதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் பாலித் தீவின் சில பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். நால்வர் மாயமாயினர். இது கடந்த பத்து ஆண்டுகளில் அந்தத் தீவு கண்ட மிக மோசமான வெள்ளம் என்று இந்தோனீசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்