பறவைக் காய்ச்சல் எதிரொலி

கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் தளர்த்தப்படும்: பிரேசில் நம்பிக்கை

2 mins read
63658b9f-8169-468c-b4ee-5598a7f4be00
மே 17ஆம் தேதி, பிரேசிலின் மொண்டெனேகுரோவில் உள்ள உள்ளூர் சந்தையில் வாடிக்கையாளர் ஒருவர் கோழி இறைச்சியை வாங்குகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

பிரேசிலியா: பிரேசிலில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதனால், அந்நாட்டின் கோழிப்பண்ணைத் தொழில் ஆட்டம் கண்டுள்ளது.

பிரேசில் கோழிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவும் பிற நாடுகளும் அவற்றை இறக்குமதி செய்ய விதித்த தடையை விரைவில் தளர்த்தும் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகளவில் பேரளவு கோழிகளை ஏற்றுமதி செய்யும் பிரேசிலின் தெற்குப் பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தால், ஜப்பான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளைப் போல் சீனாவும் குறிப்பிட்ட மாநிலத்தின் கோழிகளுக்கு மட்டும் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உலகளாவிய தேவை மிகவும் வலுவாக இருப்பதால், விரைவில் சில தளர்வுகள் இருக்கும் என்று பிரேசிலின் விவசாய அமைச்சின் அனைத்துலகச் செயலாளர் லுயிஸ் ருவா கூறினார்.

மேலும், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நீண்டகாலத்திற்குத் தொடராமல் இருக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுப்பதாகவும் உடனுக்குடன் அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக வர்த்தகத்தில் பிரேசிலின் கோழி ஏற்றுமதி 35 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது.

இதனால், பிரேசிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அந்நாட்டு விவசாயிகளுக்கு மட்டுமன்றி, முக்கிய இறக்குமதியாளர்களுக்கும் வேதனை அளிப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவால் இறக்குமதி செய்யப்படும் கோழிகளில் பெரும்பாலானவை பிரேசிலிலிருந்து வருவதாகவும் மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வருவதாகவும் பிரேசில் விவசாய அமைச்சர் கார்லோஸ் ஃபாவாரோ கூறினார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்துவரும் வர்த்தகப் போராலும் அந்நாட்டில் பரவிவரும் பறவைக் காய்ச்சலாலும் அமெரிக்க கோழிகள்மீது சீனர்கள் ஆர்வம் குறைந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத் தரவுகளின்படி, பறவைக் காய்ச்சல் காரணமாகத் தற்போது 40க்கும் மேற்பட்ட அமெரிக்க மாநிலங்களிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.

கோழி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகத் தடையைத் தளர்த்த அந்நாட்டு அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கும் இடையிலான நட்புறவை பிரேசில் விவசாயிகள் நம்பியுள்ளனர்.

சீனாவைத் தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியமும் தென்கொரியாவும் பிரேசிலியக் கோழிகளுக்குத் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்