நியூயார்க்கில் 2028 முதல் குதிரை வண்டிகளுக்குத் தடை

நியூயார்க்கில் 2028 முதல் குதிரை வண்டிகளுக்குத் தடை

படம்: நியூயார்க் டைம்ஸ்

23 Oct 2026 - 6:38 pm

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட குதிரை வண்டி சவாரிகள் 2028ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்படுகிறது.

நியூயார்க் சாலைகள், சென்ட்ரல் பார்க் பகுதிகளில் குதிரை வண்டிகளைப் பயன்படுத்த 2028ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்படும் என்று நியூயார்க் நகர மன்றம் முடிவெடுத்துள்ளது,

இதனால், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சுற்றுலா ஈர்ப்பு மற்றும் நீண்டகாலத் தொழில் முடிவுக்கு வருகிறது.

நியூயார்க் நகரத்தின் 51 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் குதிரை வண்டிகளுக்கு எதிரான மசோதாவை ஆதரித்தனர். மேயர் சோஹ்ரான் மம்தானியும் மசோதாவுக்கு ஆதரவைத் தெரிவித்தார்.

ஏழு பேர் மசோதாவுக்கு எதிராகவும், இருவர் வாக்களிப்பைப் புறக்கணிக்கவும் செய்தனர்.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவைச் சேர்ந்த ரோமன்ச் மகாஜன் என்ற 18 வயது சுற்றுலாப் பயணி குதிரை வண்டி சவாரியின் போது இறந்தார். அதன்பிறகு குதிரை வண்டிகளுக்கு எதிரான மசோதாவை வடிவமைப்பதில் தீவிரம் காட்டப்பட்டது.

இதற்கிடையே குதிரை வண்டி தடை குறித்து அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மசோதாவால் பாதிக்கப்படும் குதிரை வண்டி ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் மாற்றுத் திட்டம், இழப்பீடு வழங்க நியூயார்க் திட்டமிட வேண்டும்.

இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், நீதிமன்றத்தில் தற்காலிகத் தடை உத்தரவைக் கோருவோம் என்று போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்