ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தொடர்பு, மின்னிலக்க விவகார அமைச்சு, 16 வயதுக்குக் குறைவானோருக்குச் சொந்தமான சமூக ஊடகக் கணக்குகளை மார்ச் மாதத்திலிருந்து முடக்கவிருக்கிறது.
மின்னிலக்கக் கட்டமைப்புகள் குறித்த கொள்கைகள் மார்ச் மாதத்திலிருந்து அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு அமைச்சு அந்த அறிக்கையை வெளியிட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதுகுறித்த சாசனத்தில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கையெழுத்திட்டார்.
சமூக ஊடகங்களைக் குறித்த உத்தேச விதிகள் அடங்கிய ஆவணத்தின் ஆகக் கடைசி வரைவு, பொதுமக்களின் பார்வைக்கு இவ்வாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டது.
அதில் மின்னிலக்கத் தளங்களைப் பயன்படுத்துவதற்குக் குறைந்தபட்ச வயதை அறிமுகம் செய்வது, விதிகளைமீறும் தளங்களுக்குத் தடை விதிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
அமைச்சின் வரைவு ஆவணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் பெற்றோரின் அனுமதியுடன் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
16 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும்போது முன்பின் தெரியாதோர் அவர்களை அணுக வாய்ப்பிருக்கிறது என்றும் வன்முறை அல்லது ஆபாச உள்ளடக்கங்களைப் பிள்ளைகள் காணக்கூடும் என்றும் ஆவணம் சுட்டியது.
அமைச்சின் விதிகள் மார்ச் மாதத்தில் வெளியாகும்போது 16 வயதுக்கும் கீழுள்ளோர் சமூக ஊடகத் தளங்களிலிருந்து நீக்கப்படுவர் என்றார் திரு மியூடியா.
தொடர்புடைய செய்திகள்
புதிய விதிமுறைகளை சமூக ஊடகங்கள் எந்தக் காலக்கட்டத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது குறித்து கலந்துரையாடல் தொடர்வதாகக் கூறிய திருவாட்டி மியூடியா, விரைவில் அது முடிவுசெய்யப்படும் என்றார்.
“இந்தோனீசியா மிகப் பெரிய நாடு. மில்லியன்கணக்கான பிள்ளைகளின் கணக்குகளைச் சமூக ஊடகத் தளங்களிலிருந்து உடனடியாக நீக்கிவிட முடியாது,” என்றார் அவர்.
மிகப் பெரியத் தளங்கள், அத்தகைய தளங்களை விரைவில் நீக்கும்படி வலியுறுத்துவோம் என்று திருவாட்டி மியூடியா சொன்னார்.
சமூக ஊடகப் பயனீட்டாளர்களுக்கு வயது வரம்பை இதற்குமுன் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியா அறிமுகம் செய்தது. 16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலிருந்து தடை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா.
விதிகளைமீறும் சமூக ஊடகத் தளங்களுக்கு $49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும்.

