சோல்: தென்கொரியக் கலாசாரத்தின்மீதுள்ள அதிகாரபூர்வமற்ற தடையைச் சீனா கூடிய விரைவில் நீக்குவதற்கான சாத்தியம் இல்லை என்று தென்கொரிய அதிபர் அலுவலக ஊழியர்களுக்கான தலைவர் காங் ஹூன் சிக் கூறியுள்ளார்.
சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், கூடிய விரைவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் உச்சநிலைச் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
திரு லீ 200க்கும் அதிகமான தென்கொரிய வர்த்தகத் தலைவர்களுடன் சீனாவுக்குச் சென்றுள்ளார்.
சீனாவில் உள்ள வர்த்தகத் தலைவர்களைத் தென்கொரிய வர்த்தகர்கள் நேரில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடுவர்.
விநியோகத் தொடர், மின்னிலக்கப் பொருளியல் ஆகிய அம்சங்களில் தென்கொரியாவும் சீனாவும் ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று திரு காங் குறிப்பிட்டார்.
விநியோகத் தொடர் முதலீடு, மின்னிலக்கப் பொருளியல், புதிய தொழில்கள், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மனிதவள முதலீடு, சுற்றுலா, எல்லைத் தாண்டிய குற்றங்கள் ஆகிய பல அம்சங்களில் சீனாவும் தென்கொரியாவும் உறவை வலுப்படுத்தும் என்றார் தென்கொரியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வி சங் லக்.

