கராக்கஸ்: வெனிசுவேலாவில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) முதல் சமூக ஊடகத் தளமான எக்ஸ் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
கடந்த வாரம் அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோவால் எக்ஸ் தளம் ஓராண்டு காலத்துக்கு முன்னதாகத் தடை செய்யப்பட்டது.
இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் எக்ஸ் தளத்தில் தன்விவரங்களைப் புதுப்பித்துள்ளார். “ஒற்றுமையாக இருந்து, பொருளியல் நிலைத்தன்மை, சமூக நீதி, நாம் விரும்பும் சமூக நல அரசாங்கத்தை அமைப்போம்,” என்று அவர் பதிவிட்டார்.
2024 தேர்தலைப் பற்றிய விமர்சனங்களுக்காகப் பழிவாங்கும் நடவடிக்கையாக எக்ஸ் தளத்தை மதுரோ தடைசெய்யும் வரையில், அந்தச் சமூக ஊடகத் தளப் பயன்பாடு தொடர்ந்து அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
ஜூலை 2024 தேர்தலுக்குப் பிறகு, மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் எக்ஸ் தளத்துக்குத் தடை விதித்தார்.
அதற்கு முன்னர், எக்ஸ் வெனிசுவேலாவின் ஒரு முக்கிய சமூக ஊடகமாக இருந்தது. எனினும் தடை என்பது அமைச்சர்கள், சட்டமியற்றுபவர்கள், அரசாங்க நிறுவனங்கள் தங்கள் பக்கங்களைப் புதுப்பிப்பதை நிறுத்தியதாகவே இருந்தது.

