பேங்காக்: 30 மாடிக் கட்டடம் இடிந்ததில் 32 பேர் மரணம்

1 mins read
cfcff6f4-ca8b-47de-b9bb-53e043cb1118
அண்மையில் உலுக்கிய நிலநடுக்கத்தால் பேங்காக்கில் 30 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தொடர்கின்றன. - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கட்டப்பட்டுவந்த 30 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 32 பேர் இறந்துவிட்டதை பேங்காக் பெருநகரக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அக்கட்டடத்தில் இருந்த மேலும் 62 பேரைக் காணவில்லை.

கடந்த மார்ச் 28ஆம் தேதி மியன்மாரை உலுக்கிய 8.2 ரிக்டர் நிலநடுக்கத்தின் தாக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் உணரப்பட்டது.

பேங்காக்கில் கட்டப்பட்டுவந்த அரசுத் தணிக்கை அலுவலகம் நிலநடுக்கத்தால் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மீட்புப் பணிகளின் 15ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) மேலும் இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, அவ்விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்தது. ஒன்பது பேர் காயமுற்ற நிலையில், இன்னும் 62 பேரைக் காணவில்லை என்று பெருநகரக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பல அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் அக்கட்டட ஒப்பந்ததாரர்களில் ஒருவரான சீன ரயில்வே துறையைச் சேர்ந்தவர்களும் சனிக்கிழமை அவ்விடத்தைச் சோதித்தனர்.

ஒளி சமிக்ஞை கண்டறியப்பட்ட இடத்தை மீட்புப் பணியாளர்களால் அணுக முடியவில்லை என்று பேரிடர் தடுப்பு, தணிப்பு அலுவலக இயக்குநர் சூரியசாய் ரவிவான் தெரிவித்தார்.

ஆயினும், உள்ளே எவரேனும் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு உதவும் வகையில் அங்குள்ள துளை வழியாகக் காற்று செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஆயினும், அதனுள்ளே எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்