பேங்காக்: தானியங்கி நுழைவாயில் சேவை மேலும் 31 நாட்டவர்க்கு விரிவாக்கம்

பேங்காக்: தானியங்கி நுழைவாயில் சேவை மேலும் 31 நாட்டவர்க்கு விரிவாக்கம்

1 mins read
11cee3cf-33e7-4bca-b7b7-4e28455bbb4a
தற்போது சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு நாள்தோறும் சராசரியாக 70,000 அனைத்துலகப் பயணிகள் வருகின்றனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: இம்மாத இறுதிக்குள் பேங்காக் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் தானியக்கக் குடிநுழைவு அனுமதிச் சேவை மேலும் 31 நாட்டவர்க்கு விரிவுபடுத்தப்படும் என்று தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

விமான நிலையத்தில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைத்து, பயணிகளின் வருகையை எளிதாக்குவதே இதன் முதன்மை நோக்கம்.

துணைப் பிரதமரும் வணிக அமைச்சருமான திரு சுபஜீ சுதும்புன், சுற்றுலாத்துறை அமைச்சர் சூரசக் பஞ்சரன்வோரக்குல், போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் ஆகியோர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) அவ்விமான நிலையத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியானது.

தற்போது சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு நாள்தோறும் சராசரியாக 70,000 அனைத்துலகப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலான உச்ச நேரத்தில் மணிக்கு 5,000 முதல் 6,000 பயணிகள்வரை வருவதால் குடிநுழைவுக் கூடங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், தானியங்கி நுழைவாயில் சேவை விரிவுபடுத்தப்பட்டபின் ஆண்டுதோறும் மேலும் 6.5 மில்லியன் குறுகிய கால விசா பயணிகளும் ஏறக்குறைய 900,000 நீண்டகால விசா பயணிகளும் அதனைப் பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தபின், தாய்லாந்து செல்லும் அனைத்துலகப் பயணிகளில் ஏறக்குறைய 53 விழுக்காட்டினர் தானியங்கி நுழைவாயில் சேவையைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துபேங்காக்தானியங்கிவிமான நிலையம்கடப்பிதழ்நுழைவாயில்