டாக்கா: பங்ளாதேஷில் ஆடை உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்நாட்டு அரசாங்கம் அடுத்த மாதம் முதல் திருத்தப்பட்ட சம்பள முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.
இந்நிலையில், இப்போது மீண்டும் புதிய போராட்டம் தொடங்கியுள்ளது.
அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிய போராட்டங்களால் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடான பங்ளாதேஷில், உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியான அஷுலியாவில் வியாழக்கிழமை (நவம்பர் 5) காலை வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், சம்பள உயர்வு குறித்துத் தெளிவான அறிவிப்பை வலியுறுத்தி நெடுஞ்சாலையை மறித்தனர்.
போராட்டக்காரர்கள் காவல்துறையினர்மீது கற்களை வீசியதால் கண்ணீர்ப்புகை, ஒலி குண்டுகளைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஷுலியா பகுதியில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகச் சொன்ன அதிகாரிகள், வன்முறையைத் தடுக்க, கூடுதலான எண்ணிக்கையில் காவல்துறையினரும் எல்லைக் காவல்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினர்.
இதற்கிடையே, சாவர், காஜிபூர் போன்ற பிற தொழில்துறை மையங்களில் சில தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடியிருந்தாலும் நிலைமை சீராக இருக்கிறது. பல தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்.
டிசம்பர் மாதம் முதல் புதிய ஊதிய முறையைச் செயல்படுத்த ஊதிய வாரியம் நவம்பர் 4ஆம் தேதி ஒப்புக்கொண்டது. இதன்மூலம் ஜனவரியில் தொழிலாளர்கள் புதிய சம்பளம் பெறுவர். ஆனால், உயர்வின் அளவு இன்னும் முடிவாகவில்லை.
உணவு, வீட்டு வசதி, போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், தற்போதைய குறைந்தபட்ச மாத ஊதியமான 12,500 டாக்காவிலிருந்து 30,000 டாக்காவாக (S$308) உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகின்றனர்.
பங்ளாதேஷின் ஏற்றுமதி வருமானத்தில் 80 விழுக்காட்டிற்கும் மேலாகப் பங்களிக்கும் ஆடை உற்பத்தித் துறையில் ஏறக்குறைய 4 மில்லியன் பேர் வேலை செய்கின்றனர்.
