பங்ளாதேஷ்: மீண்டும் திறக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள்; தொடரும் சிக்கல்

பங்ளாதேஷ்: மீண்டும் திறக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள்; தொடரும் சிக்கல்

படம்: ராய்ட்டர்ஸ்

02 Nov 2026 - 5:43 pm

2 mins read

டாக்கா: பங்ளாதேஷில் செயல்படும் ஆடைத் தொழிற்சாலைகள் பல மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு வீதிகளில் போராட்டம் செய்ததால் பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

இருப்பினும், தங்களுக்குக் கூடுதல் சம்பளம் கோரித் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பங்ளாதே‌ஷின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் ஆடைத் தயாரிப்புத் துறை மிகப்பெரிய பங்காற்றுகிறது.

சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடாக விளங்கும் பங்ளாதேஷில், வாழ்க்கைச் செலவினங்களும் பணவீக்கமும் பேரளவில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக, தங்களது மாதாந்தரக் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இதனால் பல உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதோடு, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் வாடிக்கையாளர் நம்பிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளன.

ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையைப் பரிசீலிக்க அரசாங்கம் ஆறு உறுப்பினர்கள் கொண்ட சம்பள மன்றம் ஒன்றை அமைத்தது. இருப்பினும், தொழிலாளர்களின் கொந்தளிப்பு உடனடியாக ஓயவில்லை.

பல தொழிற்பேட்டைகளில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்கக் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதையும் பயன்படுத்தியது.

“தொழிலாளர்களுக்குச் சரியான சம்பளத்தைக் கொடுக்க முடியாவிட்டால், ஆலை உரிமையாளர்கள் அனைத்துலக வாடிக்கையாளர்களிடம் சிறந்த விலைக்குப் பேரம் பேச வேண்டும். உழைப்பைச் சுரண்டி வியாபாரத்தை வளர்க்கக் கூடாது,” என்று தொழிலாளர் சங்கத்தின் பாபுல் அக்தர் தெரிவித்தார்.

தொழில்துறை அதிகரித்துவரும் செலவுகள், மத்திய கிழக்குப் போரால் எழுந்துள்ள எரிசக்திச் சந்தையின் நிச்சயமற்ற நிலை, முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளில் குறைந்துவரும் தேவை ஆகிய சிக்கல்களை எதிர்கொள்வதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

உயர் பணவீக்கத்தைக் கருத்தில்கொள்ளும்போது தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்றாலும், கணிசமான சம்பள உயர்வு உற்பத்திச் செலவை அதிகரித்து, லாபத்தைக் குறைத்துவிடும் என்று டாக்கா பல்கலைக்கழகப் பொருளியல் பேராசிரியர் செலிம் ரெய்ஹான் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்