ஜோகூர்பாரு: சிங்கப்பூரும் மலேசியாவும் உரிமை கொண்டாடிய பத்து பூத்தே (பெட்ரா பிராங்கா) தீவு விவகாரத்தில் அனைத்துலக நீதிமன்றம் சிங்கப்பூருக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்தது.
2018ல் அப்போதைய பிரதமர் மகாதீர் தலைமையிலான அரசாங்கம், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முடிவை கைவிட்டது.
அந்த முடிவு, மலேசிய, ஜோகூர் வரலாற்றில் இடம்பெற்ற ‘இருண்ட அத்தியாயம்’ என்று தற்போது ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார்.
இது, ஜோகூர் சுல்தானின் வட்டார உரிமைகளை நிரந்தரமாக இழந்ததைக் குறிக்கிறது என்றும் மறுபரிசீலனைக்கான விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதற்கான மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு, வரலாற்று உண்மைகள், சட்ட ஆலோசனைகள் மற்றும் அமைச்சர்களின் ஒருமித்த கருத்துக்கு மாறாக நியாயமற்ற முறையில் நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை பத்து பூத்தே விவகாரம் தொடர்பில் மக்களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், இந்த விவகாரம் தம்மைக் கவலை அடைய வைத்தது என்றார்.
முன்னதாக, பத்து பூத்தே, மிடில் ராக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவற்றின் இறையாண்மையைக் கையாண்டது தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவிடம் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்று அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அக்கறையுள்ள குடிமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மனு, தற்போது உள்ள பொது விவாதத்தைப் பிரதிபலிக்கிறது என்று ஜோகூர் முதல்வர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பத்து பூத்தே, மிடில் ராக்ஸ், சவுத் லெட்ஜ் மீதான மலேசியாவின் இறையாண்மை உரிமைக் கோரிக்கையை அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆய்வு செய்ததாக அவர் சொன்னார்.
“சிங்கப்பூருக்கு எதிரான மலேசியாவின் வழக்கை வலுப்படுத்தும் புதிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், 2008ல் அனைத்துலக நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் விளக்கவும் மத்திய அரசு அதன் விண்ணப்பத்தை திரும்பப் பெற்றதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது,” என்று முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி சனிக்கிழமை (ஜனவரி 4) ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

