லண்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உரையை திருத்தி வெளியிட்ட விவகாரத்தில் உலகப் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியின் தலைவரும் அதன் செய்திப் பிரிவின் தலைவரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) பதவி விலகினர்.
டிரம்ப் உரையின் காணொளியை பிபிசி மாற்றியமைத்தவிதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அந்நிறுவனத்தின் நிலைப்பாடு குறித்தும் விமர்சிக்கப்பட்டன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர், டிரம்ப் ஆற்றிய உரை ஆகியவற்றின் செய்தித் தொகுப்பில் குறைபாடுகள் இருந்ததைச் சுட்டிக்காட்டி முன்னாள் தரநிலை ஆலோசகர் நிறுவனத்திற்குள் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை டெய்லி டெலிகிராப் நாளேட்டுக்குக் கசிந்ததைத் தொடர்ந்து பிபிசிக்கு அழுத்தம் அதிகரித்தது.
ஜனவரி 6ஆம் தேதி கேப்பிட்டல் கலவரத்திற்கு முன்பு டிரம்ப் உரையாற்றியிருந்தார். அந்த உரையின் காணொளியில் சில மாற்றங்களை முக்கிய பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான பிபிசி செய்திருந்தது. இது, பலரது கோபத்தைக் கிளறியது.
இந்நிலையில் பிபிசியின் தலைவர் டிம் டேவியும், பிபிசி நியூஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேபோரா டர்னசும் பதவி விலகியிருக்கின்றனர்.
இவர்களது பதவி விலகலை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். இருவரும் நேர்மையற்றவர்கள் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி தனது பனோரமா நிகழ்ச்சியில், டிரம்ப் ஆற்றிய உரையின் இரு பகுதிகளைத் திருத்தி ஒன்றாகச் சேர்த்து வெளியிட்டது. இது, 2021 ஜனவரியில் கேப்பிட்டல் ஹில்லில் நடைபெற்ற கலவரத்தை டிரம்ப் தூண்டுவதுபோல அமைந்திருந்தது.
பிபிசிக்கு 2020ஆம் ஆண்டிலிருந்து தலைவர் பொறுப்பில் இருந்து வரும் டிம் டேவி, தனது நிறுவனத்தின் செயல்பாட்டைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“பிபிசி உலகத் தரம் வாய்ந்த செய்தி நிறுவனமாகும். இருந்தாலும் சில தவறுகள் ஏற்பட்டதற்காகப் பொறுப்பு ஏற்று பதவி விலகுகிறேன்,” என்று டிம் டேவி குறிப்பிட்டுள்ளார்.

