லண்டன்: பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் ஆட்குறைப்பு செய்தது.
இது கவலை தரும் போக்கு என ஊடகத்துறை ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் பிரிட்டிஷ் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்தித்துறையை இது வெகுவாகப் பாதிக்கக்கூடும் என்று அது அக்டோபர் 16ஆம் தேதியன்று கூறியது.
செய்திப் பிரிவைச் சேர்ந்த குறைந்தது 100 பேரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அக்டோபர் 15ஆம் தேதியன்று பிபிசி தெரிவித்தது.
பிரபலங்கள், உலகத் தலைவர்களை விரிவான முறையில் பேட்டி எடுக்கும் HARDtalk நிகழ்ச்சியை ரத்து செய்யப்போவதாகவும் அது கூறியது.
இந்த ஆட்குறைப்புக்கு முன்பே பிபிசியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான Newsnight-ன் ஊழியர் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் வாரநாள் ஒளிபரப்பு அரைமணி நேரத்துக்குக் குறைக்கப்பட்டது.
பணவீக்கம் மற்றும் செலவினம் அதிகரிப்பு காரணமாக பிபிசிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் செய்தித்துறையில் ஆட்குறைப்பு செய்வதன் மூலம் மக்களுக்கு முக்கியமான செய்திகளை கொண்டு போய் சேர்க்கப்படும் சேவையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்யப்படும் செய்திகளை வழங்கும் சேவையும் பேரளவில் பாதிப்படையும் என்று தொழிற்சங்கம் கவலை தெரிவித்தது.
பிரிட்டனில் உள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பணியாற்றும் 40,000க்கும் அதிகமானோரை இந்தத் தொழிற்சங்கம் பிரதிநிதிக்கிறது.