பிரசல்ஸ்: பெல்ஜியத்தில் சாதாரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கால்வாய் கட்டுமானம், பல கோடி மதிப்புள்ள புதையலின் கண்டுபிடிப்புக்கு இட்டுச்சென்றுள்ளது.
தலைநகர் பிரசல்சிற்கு வடமேற்குப் பகுதியில் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில் சின்ட் கிலிஸ் டென்டெர்மொன்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு, முன்னர் மதுபான ஆலையாக இருந்த கட்டடம் ஒன்றில் 9 மில்லியன் பவுன்ட் மதிப்பிலான தங்கம் கண்டெடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 11ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட அந்தத் தங்கம் எங்கிருந்து வந்தது, அது யாருக்குச் சொந்தமானது போன்ற கேள்விகளுக்கான விடையை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.
புதிய கழிவுநீர்க் குழாய்களைப் பொறுத்துவதற்காக கட்டடத்தின் அடித்தளத்தை அகற்றியபோது தங்கப் புதையல் சிக்கியது.
அதைக் கண்டுபிடித்த பெருமை 18 வயது கோபி என்ற மாணவரைச் சேரும். கோடைக்கால விடுமுறையைக் கழிக்க ‘டெ பிரான்ட்’ என்ற கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்த அவர், கட்டடத்தின் அடித்தளத்தைத் தோண்டினார்.
முதலில் சாதாரண நாணயங்களைத்தான் பார்த்ததாகச் சொன்ன கோபி, தோண்டத் தோண்ட தங்கக் கட்டிகளையும் பொன்னையும் மெல்ல மெல்ல காணத் தொடங்கினார்.
19ஆம் நூற்றாண்டில் ஆலைக்கான கட்டடத்தைக் கட்டிய தியோஃபிலஸ் வான் ஆஷ் என்பவர், மதுபானம் தயாரிக்கும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1899ஆம் ஆண்டிலிருந்து 1970ஆம் ஆண்டுவரை ஆலையில் மதுபானம் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் அது கைமாறியது.
தற்போது அந்த ஆலையின் கட்டடம் சிஏடப்பிள்யூ ஊஸ்ட்-விளான்டெரென் என்ற சமூகநல அமைப்புக்குச் சொந்தமாக உள்ளது.
கட்டடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தங்கப் புதையலும் பிரசல்சில் உள்ள பாதுகாப்பான அரசாங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புதையலுக்கு உரியவர்களை அதிகாரிகள் உறுதிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
