தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவானுக்கு $725 மில்லியன் தற்காப்பு ஆதரவு வழங்கும் அமெரிக்கா

1 mins read
7461c87f-848f-4988-babb-17f0329eb264
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: தைவானுக்கு 567 மில்லியன் அமெரிக்க டாலர் (S$725 மில்லியன்) தற்காப்பு ஆதரவு வழங்கிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

முறையான அரசதந்திர உறவுகள் இல்லாத நிலையிலும் தைவானின் மிக முக்கியமான ஆதரவாளராகவும் ஆயுத வழங்குநராகவும் அமெரிக்கா திகழ்கிறது.

தைவானிற்கு ஆயுதங்கள் விற்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தைவானிற்கு ஆயுத, ராணுவக் கல்வி, பயிற்சி எனத் தற்காப்பு ஆதரவு வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு வெளியுறவு அமைச்சருக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப்ரலிலும் உக்ரேன், இஸ்ரேல், தைவான் ஆகிய நாடுகளுக்குப் பல பில்லியன் டாலர் உதவி வழங்குவதற்கான மசோதாவில் திரு பைடன் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மேம்படுத்தப்பட்ட எஃப்-14 போர் விமானங்கள் உள்ளிட்ட அமெரிக்க ஆயுத விநியோகம் தாமதமடைவதாக தைவான் புகார் தெரிவித்துள்ளது.

தைவான் தனது இறையாண்மைக்கு உட்பட்டது எனக் கூறிவரும் சீனா, அதனை வலுப்படுத்தும் வகையில் கடந்த ஐந்தாண்டுகளாக ராணுவ நிலையிலும் அரசியல் நிலையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆயினும், சீனாவின் கூற்றைத் தைவான் வன்மையாக மறுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்