தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீன அதிபரைச் சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

2 mins read
81473e5c-80a7-49d5-817e-43d7cf2787e7
சென்ற ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை இந்தோனீசியாவில் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் புதன்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அமெரிக்க-சீன தேசிய குழுவும் அமெரிக்க-சீன வர்த்தக மன்றமும் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்க நிறுவனத் தலைவர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாக அமெரிக்க செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

திரு ஸி சீனப் பொருளியலுக்கான முதலீடு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான் பிரான்சிஸ்கோவில் 21 உறுப்பு நாடுகள் அடங்கிய ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டுக்கு இடையே இரு அதிபர்களும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து இரவு விருந்து நிகழ்ச்சி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா வழிநடத்தும் ஆசியாவுக்கான புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து திரு பைடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது ஜனநாயகக் கட்சியில் உள்ள சிலர் அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வர்த்தகம் மூலம் பசிபிக் ரிம் நாடுகளை ஒன்றிணைக்கும் எண்ணத்தோடு அமெரிக்கா முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஏபெக் மாநாட்டைத் துவங்கியது.

இருப்பினும், அண்மைய மாதங்களில் பெய்ஜிங்கிற்கு எதிராக பைடன் நிர்வாகம் தடைகளை விதித்து வந்துள்ளது.

ஆனாலும், அமெரிக்காவும் சீனாவும் அதிக நிலைத்தன்மைக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளன.

அரசியல் ரீதியாக வாஷிங்டனுக்குச் செல்வது சாத்தியமில்லை என்பதாலும் கிட்டத்தட்ட ஓராண்டில் அமெரிக்கத் தேர்தல் நடைபெறவிருப்பதாலும், அமெரிக்க மண்ணில் திரு ஸி, திரு பைடனைச் சந்திப்பதற்கான தனித்துவமான வாய்ப்பை ஏபெக் மாநாடு ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்