தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பைடன்: காஸா போர் நிறுத்த உடன்படிக்கை கூடிய விரைவில் கையெழுத்திடப்படக்கூடும்

1 mins read
746015d6-1d90-4d42-91e4-dab6a0b6ad57
ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். - படம்: புளூம்பர்க்

தோஹா: காஸா போர் நிறுத்த உடன்படிக்கை கூடிய விரைவில் கையெழுத்திடப்படக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை (ஜனவரி 13) தெரிவித்தார்.

தமது அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான சாதனைகளை அவர் பட்டியலிட்டுப் பேசியபோது இத்தகவலை வெளியிட்டார்.

போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) கத்தார் தலைநகர் தோஹாவில் சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா போர் நிறுத்தம் குறித்த விவரங்களை அப்போது அவர்கள் கலந்துரையாடி முடிவெடுப்பர்.

ஜனவரி 13ஆம் தேதியன்று போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான இறுதி நகலை இஸ்‌ரேலிடமும் ஹமாஸ் அமைப்பிடமும் பேச்சுவார்த்தையை ஏற்று நடத்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று அதிபர் பைடன் கூறினார். அத்துடன், போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்‌ரேலுக்குப் பாதுகாப்பு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், போரில் கடும் துன்பத்துக்கு ஆளான பாலஸ்தீனர்களுக்கு உதவி செய்ய இந்த ஒப்பந்தம் உதவும் என்றார் அதிபர் பைடன்.

போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திடுவது குறித்து இனி ஹமாஸ்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தொடர்பாக நல்லதொரு தீர்வை எட்ட ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, காஸாவில் 98 பிணைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்‌ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
காஸாபோர்ஒப்பந்தம்