வாஷிங்டன்: மின்வாகனங்கள், கணினிச் சில்லுகள், மருத்துவ தயாரிப்புகள் உட்பட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
“போட்டி நியாயமாக இருக்குமெனில் அமெரிக்க ஊழியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். ஆனால், நெடுங்காலமாகவே போட்டி நியாயமாக இருக்கவில்லை,” என்று வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (மே 14) தொழிற்சங்க, நிறுவனப் பேராளர்கள்முன் ஆற்றிய உரையின்போது அதிபர் பைடன் கூறினார்.
அத்துடன், சீனப் பொருள்கள் அமெரிக்கச் சந்தையில் குவிவதைத் தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அறிவிப்பின்படி, இறக்குமதி வரி மின்வாகனங்களுக்கு 100 விழுக்காட்டிற்கு மேலும் பகுதி மின்கடத்திகளுக்கு 50 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அமெரிக்க வாக்காளர்களைக் கவரும் நோக்கில் திரு பைடன் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடி தரப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.
வரி உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்த சீனாவின் வணிக அமைச்சு, தனது நலன்களைத் தற்காக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
வரியை உயர்த்திய அமெரிக்காவின் செயல் ‘அரசியல் சூழ்ச்சி’ என்று, வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகப் பேச்சாளர் லியு பெங்யு குறிப்பிட்டார். மேலும், இது ஏமாற்றம் தருவதாகவும் உலக வர்த்தக நிறுவன விதிமுறைகளை மீறிய செயலாகவும் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2023ஆம் ஆண்டு 427 பில்லியன் டாலர் (S$576 பி.) மதிப்பிலான சீனப் பொருள்களை இறக்குமதி செய்த அமெரிக்கா, பதிலுக்கு 148 பில்லியன் டாலர் (S$200 பி.) மதிப்பிலான தனது தயாரிப்புகளைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது.


