வாஷிங்டன்: டிரம்ப் ஆதரவாளர்கள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அமெரிக்கர்கள் மறந்துவிடக்கூடாது என்று அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய அறிக்கை தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்றம் கூடி அடுத்த அதிபராக டோனல்ட் டிரம்ப்பை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க இருக்கும் நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் திரு பைடனிடம் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால், டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
அமெரிக்க அதிபராக பைடனை அந்நாட்டு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
“முன்பு நடந்தவவற்றை ஒரு நாடு மறந்தால் அதேபோல ஒரு நிகழ்வு மீண்டும் நிகழும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது மீண்டும் நடக்கக்கூடாது,” என்று அதிபர் பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
டிரம்ப்பை அதிபராக நாடாளுமன்றம் அங்கீகரிக்கும்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் போல இம்முறை நிகழாது என்றார் அதிபர் பைடன்.
தொடர்புடைய செய்திகள்
மாறாக, அதிபரை அங்கீகரிக்கும் செயல்முறை அமைதியாக நடைபெறும் என்று அவர் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் அமெரிக்காவில் பிறந்தால் அப்பிள்ளைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுவதைத் தடுக்க டிரம்ப் கொண்டுள்ள திட்டம் தவறானது, முறையற்றது என்று அதிபர் பைடன் குறைகூறினார்.
அமெரிக்க அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையை டிரம்ப் மாற்ற நினைப்பது சரியல்ல என்று அதிபர் பைடன் சாடினார்.
அமெரிக்கா எதிர்நோக்கும் பல பிரச்சினைகளில் வெள்ளையர் மேலாதிக்கப் போக்கும் ஒன்று என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.