கோவில் பூனையைக் காண பெருங்கூட்டம்; ‘ஹை ஃபைவ்’ தர நீண்டநேரம் காத்திருப்பு

2 mins read
dd4775f4-5f4c-439b-a5ce-399bb55fada8
பார்வையாளர்களுடன் ‘ஹை ஃபைவ்’ தரும் பூனை. - டிக்டாக் காணொளிப்படம்

கோவில் யானையைப் பலரும் பார்த்திருக்கலாம்! ஆனால், கோவில் பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அப்படி ஒரு பூனை சீனாவில் உள்ள ஒரு கோவிலில் இருக்கிறது.

சூஜாவ் நகரிலுள்ள் ஸியுவான் கோவில் என்ற அந்த வழிபாட்டுத்தலம் குறித்த தகவல் அண்மையில் இணையம் வழியாகப் பரவ, இப்போது அங்குப் பெருங்கூட்டம் கூடுகிறது.

அதற்கு, கழுத்தில் தங்க சங்கிலியுடன் காணப்படும் அப்பூனையே பெரிதும் காரணம். அப்பூனையுடன் ‘ஹை ஃபைவ்’ தருவதற்காகவே சுற்றுப்பயணிகள் பலரும் அங்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.

பூனையுடன் ஹை ஃபைவ் தருவதால் தமக்கு வாழ்வில் நற்பேறு கிட்டும் என்று அவர்கள் நம்புவதாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தொடர்ந்து மூன்று நாள்களாக அக்கோவிலுக்குச் சென்றதாகப் பெண் சுற்றுப்பயணி ஒருவர் கூறினார்.

“சிலவேளைகளில், பூனையுடன் ஹை ஃபைவ் கொடுக்க அரைமணி நேரம்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனாலும், அது முழு மதிப்பிற்குரியது. ஏனெனில், பூனையுடன் ஹை ஃபைவ் தருவது இதந்தரும் செயல்,” என்றார் அப்பெண்.

அப்பூனை குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி டிக்டாக்கில் பதிவான அத்தகைய காணொளி ஒன்று 1.6 மில்லியன் பார்வைகளுக்குமேல் பெற்றுள்ளது.

கோவிலுக்கு நுழைவுக்கட்டணமாக ஐந்து யுவான் (S$1) செலுத்த வேண்டும்.

ஆளை அயர்த்தும் கண்கவர் தோட்டங்கள், பாரம்பரிய பௌத்த கட்டடக்கலையுடன் புகழ்பெற்ற பண்பாட்டுத் தலமாகத் திகழும் ஸியுவான் கோவில், ‘செல்லப் பூனைகளின் பொன்னுலகம்’ என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அங்கு ஏராளமான தெருப்பூனைகள் சுற்றித் திரிகின்றன.

ஆயினும், ‘ஹை ஃபைவ்’ பூனையானது தெருப்பூனையன்று. அக்கோவிலுக்கு வருகைதரும் திரு லியூ என்பவரின் செல்லப் பூனை. அந்த நான்கு வயதுப் பூனைக்கு அவர் சூட்டியுள்ள பெயர் ‘ஜெல்லிபீன்’.

வெளியில் செல்வது அதற்குப் பிடிக்கும் என்பதால் அதனை வார இறுதி நாள்களில் சூரியக் குளியலுக்கு அழைத்துச் செல்வாராம் திரு லியு.

இதனிடையே, ஜெல்லிபீனுடன் ஸியுவான் கோவிலுக்குச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள அவர் முடிவுசெய்துள்ளார். அப்பூனையின்மீதே பலரும் கவனம் செலுத்துவது அதற்கு நல்லதன்று என்று அவர் நினைப்பதே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்