நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமூக ஊடகத்தைத் தடைசெய்யும் மசோதா

நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமூக ஊடகத்தைத் தடைசெய்யும் மசோதா

2 mins read
b3e6704b-b695-4874-8433-74b671790f67
பிள்ளைகளைச் சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைப்பது பெற்றோரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார். - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சிட்னி: நியூசிலாந்தின் பழைமைவாதக் கூட்டணி அரசாங்கம், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் மசோதாவை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த விதியை மீறும் நிறுவனங்களின் உலகளாவிய வருவாயில் 10 விழுக்காடு வரை அபராதம் விதிக்கவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மசோதாவின்கீழ், கணக்குத் தகவல்கள், முக அடையாளத் தொழில்நுட்பம், மின்னிலக்க அடையாள ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பயனர்களின் வயதை உறுதிப்படுத்த சமூக ஊடக நிறுவனங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

“நியூசிலாந்து குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“சமூக ஊடகங்கள்வழி தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம், அடிமையாக்கும் தொழில்நுட்பம், பிள்ளைகளால் கையாள முடியாத அழுத்தங்கள் ஆகியவற்றை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். அத்துடன், இது அவர்களின் குடும்ப வாழ்க்கை, மனநலம், தூக்கம், கல்வி ஆகியவற்றைப் பாதிக்கிறது,” என்று திரு லக்ஸன் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேறப் போதிய ஆதரவு கிடைக்குமா என்பது உடனடியாகத் தெரியவில்லை. திரு லக்ஸனின் கூட்டணிப் பங்காளிகளில் ஒன்றாக விளங்கும் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி மசோதாவிற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளதே அதற்குக் காரணம்.

கடந்த டிசம்பர் மாதத்தில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களை 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழ்ந்தது.

அந்தச் சட்டம் ஒரு மிகப்பெரிய தோல்வி என்று கூறினார் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான திரு வின்ஸ்டன் பீட்டர்ஸ். பிள்ளைகளைச் சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைப்பது பெற்றோரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்