வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய அரசாங்கத்தை மறுசீரமைக்கும் பணியில் கொஞ்ச காலம் ஈடுபட்டிருந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் செல்வந்தருமான திரு இலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
“திரு மஸ்க் வியாழக்கிழமை இரவு (மே 29) விலகுகிறார்,” என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
அரசாங்கச் செயல்திறன் துறையின் சிறப்பு ஊழியராகப் பணியாற்றிய காலம் முடிவுக்கு வருவதாகப் புதன்கிழமை எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட திரு மஸ்க், அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு நன்றிகூறிக்கொண்டார்.
திரு மஸ்க்கின் பதவி விலகல் துரிதமாகவும் எந்தவித ஆர்பாட்டமும் இன்றி நிகழ்ந்தது. அவர் திரு டிரம்ப்புடன் அதிகாரபூர்வ விதத்தில் உரையாடவும் இல்லை என்று தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.
டிரம்ப் நிர்வாகத்திலிருந்து திரு மஸ்க் ஏன் விலகுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஒரு நாளுக்கு முன் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மசோதாவை குறைகூறிய திரு மஸ்க், அதற்கான விலை மிகவும் அதிகம் என்றும் செயல்திறன் துறையில் தமது பணிக்கு இடையூறாக அமையும் என்றும் கூறினார்.
வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் திரு மஸ்கின் கருத்துகளால் அதிருப்தியடைந்தனர்.
திரு டிரம்ப் அதிபர் பதவியை ஏற்ற பின், செலவந்தரான திரு மஸ்க் திரு டிரம்ப்பின் வட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கச் செலவினங்களிலிருந்து கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர் வரையிலான செலவைச் செயல்திறன் துறையால் குறைக்க முடியும் என்று திரு மஸ்க் பிரசாரத்தின்போது கூறியிருந்தார்.
மத்திய அரசாங்க ஊழியர்களின் கொவிட்-19 காலச் சலுகைகளை மீட்டுக்கொள்வதன் மூலம் பலர் தாமாக முன்வந்து வேலையிலிருந்து விலகுவர் என்றார் திரு மஸ்க்.
நாளடைவில் ஊழியரணியைக் குறைப்பதற்கான திரு மஸ்கின் முடிவைப் பலர் துணிந்து எதிர்த்தனர். அதோடு அரசாங்கத் துறை ஊழியர்கள் குறித்த முடிவு அமைச்சர்கள் கையில்தான் இருக்கிறது, திரு மஸ்கின் கையில் அல்ல என்று மார்ச் மாதம் திரு டிரம்ப் நினைவூட்டினார்.
அதையடுத்து வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோ, போக்குவரத்து அமைச்சர் ஷான் டஃபி, நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆகியோருக்கும் திரு மஸ்குக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
செலவுகளை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியாததால் அரசாங்கத்தில் தமது நேரம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும் திரு மஸ்க் இதற்குமுன் கூறிவந்தார்.