பாரிஸ்: வெப்பமண்டலப் பகுதிகளில் பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்குக் கடும் வெப்பமும் ஒரு காரணம் என்று ஆய்வொன்று கூறுகிறது.
பறவை இனத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதற்கு வனப் பகுதிகளை அழிப்பது மட்டும் காரணமன்று என அது குறிப்பிட்டது.
நேச்சர் ஈக்கோலஜி அண்ட் எவொல்யூஷன் எனும் இயற்கைச் சூழலியல் குறித்த சஞ்சிகை அந்த ஆய்வைத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்டது.
1950ஆம் ஆண்டுக்கும் 2020க்கும் இடையில் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்ந்த பறவைகளின் எண்ணிக்கை மிதமிஞ்சிய வெப்பநிலையால் 25 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடு வரை குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பாவையும் ஆஸ்திரேலியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டனர்.
பறவை இனத்தில் கிட்டத்தட்ட பாதி வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுவதாகக் கூறப்பட்டது.
“ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன,” என்று கட்டுரையை எழுதிய தலைமை ஆசிரியர் மேக்ஸ்மில்லன் கோட்ஸ் கூறினார்.
வெப்பமண்டலப் பகுதிகளில் வசிக்கும் பறவைகள் இப்போது ஆண்டுதோறும் 30 நாள்கள் கடும் வெப்பத்தை எதிர்கொள்வதாக அவர் சொன்னார். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு மூன்று நாள்களாக இருந்தது என்றார் முனைவர் கோட்ஸ்.
“பல்லியல் சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த சிந்தனையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பறவைகளின் பாரம்பரியமான வாழ்விடங்களைப் பாதுகாப்பது முக்கியம்தான். ஆனால் பருவநிலை மாற்றத்தைக் கையாளாமல் அது சாத்தியப்படாது,” என்று அவர் சொன்னார்.