யங்கூன்: மியன்மாரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று சேர்த்து வைத்திருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் குறைந்தது 55 பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பிற்பகல் நேரத்தில் குவாங் டாட் கிராமத்தில் நிகழ்ந்தது. திங்கட்கிழமையும் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
கட்டடச் சிதைவுகளின்கீழ் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வெடிப்புச் சம்பவம் குறித்து டாங் தேசிய விடுதலைப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் பலர் உயிரிழந்ததாக அது குறிப்பிட்டது. இருப்பினும் எத்தனை பேர் மாண்டார்கள் என்பது குறித்த தகவலை அது வெளியிடவில்லை.
அதேபோல் எதனால் வெடிப்பு ஏற்பட்டது என்பது குறித்தும் அது குறிப்பிடவில்லை.
கிராமவாசிகளும் உள்ளூர்வாசிகளும் குறைந்தது 55 பேர் மாண்டதாகக் கூறுகின்றனர்.
“வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதி அடையாளம் தெரியாத அளவில் சேதமடைந்துள்ளது. முதலில் பார்க்க இது ஏதோ ஒரு பெரிய வான்வழித் தாக்குதல் போல் இருந்தது,” என்று குடியிருப்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சீன எல்லையில் உள்ள கிராமங்களை டாங் தேசிய விடுதலைப் படை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. தற்போது அந்தப் படை மியன்மார் ராணுவத்துடன் சண்டை நிறுத்த உடன்பாட்டில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சேமித்து வைக்கப்பட்ட வெடி பொருள்கள் சுரங்கப் பணிகளுக்காகச் சேகரிக்கப்பட்டவை என்று அது கூறுகிறது.
மியன்மாரில் முக்கியமான சில கனிம வளங்கள் உள்ளன. அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஈட்டும் வருவாயைக் கொண்டு தங்களது தற்காப்பு நடவடிக்கையை ராணுவமும் கிளர்ச்சிப் படைகளும் வலுப்படுத்துகின்றன.
மியன்மாரில் 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அதன் பிறகு அங்குக் கலவரமும் புரட்சியும் வெடித்தன. சில பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.

