கிள்ளான் துறைமுகம்: மலேசியாவில் ஜூன் 6ஆம் தேதி படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல்போன திருமணமான தம்பதியின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர்.
வடக்குத் துறைமுகம் அருகே தஞ்சோங் ஹரப்பானிலிருந்து 0.1 கடல்மைல் தூரத்தில் 200 மீட்டர் இடைவெளியில் திரு கான் ஹோன் டாட், 32, அவருடைய மனைவி கரீன் மேன், 29, இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தீயணைப்பு, மீட்புத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், காலை 7.45 மணியளவில் அத்தம்பதியின் உடல்களைக் கண்டறிந்தனர்.
ஷா அலாம் மருத்துவமனையில் உள்ள தடயவியல் பிரிவுக்கு காலை 8.50 மணியளவில் அவர்களின் உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
ஜூன் 6ஆம் தேதி மாலை படகு கவிழ்ந்த அசம்பாவிதத்தில் முன்னதாக மூன்று உடல்கள் மீட்கப்பட்டன.
மூன்று வயதுச் சிறுவன் டேரன் கான், திரு சியூ சோன் ஹின், 50, திரு ஃபோங் யோங் சென், 29, மூவரின் உடல்கள் படகிற்குள் கண்டெடுக்கப்பட்டன. டேரன், கான்-மேன் தம்பதியின் மகனாவார்.
இச்சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒரேயொருவர் திரு ஆல்வின் சாங் யான் சின், 17.
இந்நிலையில், அந்தப் படகை அதன் உரிமையாளர் இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் நிகழ்ந்தபோது படகில் இருந்தவர்கள் உயிர்காப்பு உடைகளை அணிந்திருக்கவில்லை எனவும் நம்பப்படுகிறது.

