ராமேசுவரம்: இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரையிலான கடற்பகுதியில் அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் மணல் திட்டுகளுக்கு இலங்கையின் சுற்றுலாத்துறை சார்பில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) படகுச் சேவை தொடங்கப்படுகிறது.
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை மொத்தம் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் தனுஷ்கோடியிலிருந்து முதல் ஆறு திட்டுகள் இந்திய எல்லைக்குட்பட்டவை. ஏழு முதல் 13 வரையிலான திட்டுகள் இலங்கைக்குச் சொந்தமானவை.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தனது எல்லைக்குள் அமைந்துள்ள மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் பயணிகளைப் படகில் அழைத்துச் செல்லும் சேவையை இலங்கை தொடங்கவுள்ளது.
தலைமன்னாரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) நடைபெற்ற வெள்ளோட்டப் படகுச் சேவையில், இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், மன்னார் மாவட்ட ஆட்சியர் கனகேஸ்வரன், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
“வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளைப் பார்வையிடும் இந்த வாய்ப்பு, வடக்கு மாகாணச் சுற்றுலாத் துறை வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும்,” என்று நிகழ்ச்சியில் பேசிய வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கூறினார்.
மன்னார் மாவட்டத்தின் தனித்துவமான இயற்கை, சுற்றுலா வளங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதுடன், உள்ளூர், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தி மாவட்டத்தின் பொருளியலை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும் என்றார் அவர்.
