மாஸ்கோ: வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்கெனி பிரிகோசின் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து விமானத்தின் குரல்பதிவுப் பெட்டிகளும் 10 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ரஷ்ய விசாரணையாளர்கள் வெள்ளிக்கிழமை அதைத் தெரிவித்தனர்.
புதன்கிழமை நடந்த அந்த விபத்தில் பிரிகோசின் மாண்டதாக நம்பப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், மாஸ்கோவின் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிராக வாக்னர் அமைப்பு கிளர்ச்சி செய்தது. ஆனால் அக்கிளர்ச்சி விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
புதன்கிழமை மாஸ்கோவுக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானது படுகொலைச் சம்பவம் என்ற ஊகங்கள் பரவின.
அந்த விமானத்தின்மீது குண்டு வீசப்பட்டிருக்கலாம் அல்லது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சிலர் ஊகித்தனர்.
ரஷ்ய அதிபர் மாளிகை (கிரெம்ளின்) திரு பிரிகோசினைக் கொல்ல உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுவது ‘பச்சைப் பொய்’ என்று அதிபர் விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளானது ‘துயரச் சம்பவம்’ என்று கிரெம்ளின் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து நடந்து கிட்டதட்ட 24 மணி நேரம் வரை அமைதிகாத்த அதிபர் புட்டின், அதன் பிறகே பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். திரு பிரிகோசின் ‘திறமையான மனிதர்’ என்று கூறிய புட்டின், ‘வாழ்க்கையில் அவர் தீவிரமான தவறுகளை இழைத்தவர்’ என்றும் குறிப்பிட்டார்.
விபத்து நடந்த இடத்தில் மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணு ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாயப் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டனவா என்பது குறித்த விசாரணை தொடங்கியிருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து அவர்கள் கருத்துரைக்கவில்லை.

