காஸாவில் ஹமாசின் வசமுள்ள பிணையாளிகளின் சடலங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ சனிக்கிழமை (அக்டோபர் 25) உறுதி கூறியிருக்கிறார். இஸ்ரேலுக்குச் சென்றுள்ள அவர், ஹமாஸ் குழுவால் பிணைபிடிக்கப்பட்ட இருவரின் குடும்பத்தினரைச் சந்தித்தார்.
“ஹமாசின் வசம் இருந்தபோது மாண்ட பிணையாளிகளின் வாழ்வை நாங்கள் மறக்கமாட்டோம்,” என்று திரு ரூபியோ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.
“அமெரிக்கக் குடிமக்களான இட்டே சென், ஓமெர் நியூட்ரா ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர்களின் சடலங்கள் கிடைக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம்,” என்றார் அவர். இஸ்ரேலுக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் முடிவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
‘பிணையாளிகள், காணாமாற்போன குடும்பத்தாருக்கான அமைப்பு’ எனும் இஸ்ரேலியக் குழு, திரு ரூபியோவின் கருத்துகளை வரவேற்றது.
“இன்னும் 13 பிணையாளிகள் இல்லம் திரும்பவேண்டும். 13 குடும்பங்களுக்கு ஒரு முடிவு வேண்டும்,” என்று அந்தக் குழு, ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டது.
“கடைசிப் பிணையாளி விடுவிக்கப்படும்வரை தயவுசெய்து நிறுத்தவேண்டாம்,” என்று அது தெரிவித்தது.
திரு சென், திரு நியூட்ரா இருவருமே இஸ்ரேலிய-அமெரிக்கக் குடியுரிமைகளைப் பெற்றவர்கள். திரு சென் இஸ்ரேலிய ராணுவத்தில் சார்ஜென்ட்டாக இருந்தவர். திரு நியூட்ரா, அவராக முன்வந்து படைவீரராகச் சேர்ந்தார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாசும் அதன் தோழமைப் பிரிவினரும் நடத்திய தாக்குதல்களில் இருவரும் மரணமடைந்தனர். 19 வயதாகியிருந்த திரு சென் மாண்டதை, ராணுவம் 2024 மார்ச்சில் அறிவித்தது. திரு நியூட்ரா மாண்டபோது அவருக்கு வயது 21.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே அண்மையில் நடப்புக்கு வந்த சண்டை நிறுத்த உடன்பாட்டின்படி, உயிருடன் இருந்த 20 பிணையாளிகளைப் பாலஸ்தீனக் குழு விடுவித்தது. மாண்ட 15 பிணையாளிகளின் சடலங்களும் இஸ்ரேலிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன. எஞ்சிய 13 பேரின் சடலங்கள் இன்னும் காஸாவில் இருக்கின்றன.
உடன்பாட்டின்படி பதிலுக்கு இஸ்ரேல் ஏறக்குறைய 2,000 கைதிகளை விடுதலை செய்தது. அவர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீனர்கள்.

