பொலிவியாவில் கனமழை, வெள்ளம்

பொலிவியாவில் கனமழை, வெள்ளம்

1 mins read
4aeef3d2-66bf-465b-a386-3a34f1ffd816
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லா பாஸ்: பொலிவியாவில் கனமழை காரணமாக பசாஜாஹுவிரா ஆறு நிரம்பி வழிந்தது.

இதனால் அருகில் உள்ள பாஜோ லோஜேட்டா குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.

“பாதிக்கப்பட்ட பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. மக்களின் அலறல் சத்தம் கேட்டது. 4 வயது சிறுமியைக் காணவில்லை. அவரது பெற்றோர் நிலைகுலைந்துவிட்டனர். கூரைகளின் வழியாக மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று பாஜோ லோஜேட்டா நகராட்சித் தலைவர் திருவாட்டி ஜுலிட்டா கிலாவிஜோ, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மாயமான சிறுமியை மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாகப் பொலிவியாவின் குடிமைத் தற்காப்பு துணை அமைச்சர் ஜுவான் கார்லோஸ் கால்விமோன்டேஸ் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாகக் குறைந்தது 26 பேர் காயமடைந்தனர்.

40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட இடம் சேறும் சகதியுமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடியிருப்பாளர்களை மீட்கும் பணியில் ஏறத்தாழ 300 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடத்தைப் பொலிவிய அதிபர் லுயிஸ் ஆர்சே நேரில் சென்று பார்த்தார்.

சேதமடைந்துள்ள குடியிருப்புப் பகுதி மறுசீரமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

பேரிடர் நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்