அறியப்படாத ஆளிடமிருந்து ஆசிய நாடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்

2 mins read
c892dccc-a120-4704-ab00-f92001c9c263
ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளுக்குத் தொலைநகல் இயந்திரம் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. - படம்: செயற்கை நுண்ணறிவு

சோல்: கடந்த சில ஆண்டுகளாக ஆசிய நாடுகளுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டல் இன்னும் புரியாத புதிராக நீடிக்கிறது.

திரு டாகாஹிரோ காராசாவா என்ற பெயரில் தொலைநகல் இயந்திரம் (Fax) மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்களை ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய பல நாடுகள் எதிர்கொண்டன. சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கல்ல.

வெடிகுண்டு மிரட்டல் வருமே தவிர உண்மையில் வெடிகுண்டுகள் இல்லை.

காராசாவா என்ற பெயரில் வாழ்ந்துவரும் ஜப்பானிய வழக்கறிஞர், மிரட்டல்களுக்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கைவிரித்துவிட்டார்.

யார், எதற்காக அத்தகைய வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்புகின்றனர் என்ற புதிர் தொடர்கிறது.

ஆக அண்மையில் தென்கொரியாவில் உள்ள பல்வேறு பள்ளிகள், சோலில் உள்ள கடைத்தொகுதிகள் ஆகியவற்றுக்குத் தொலைநகல் இயந்திரம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து நூற்றுக்கணக்கானோர் அவ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதற்கு அடுத்த மாதமே அஜோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு ‘அஜோ பல்கலைக்கழகத்தில் உள்ள அனைவரும் இறக்கப்போகிறார்கள்’ என்ற தலைப்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி 38 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அந்த மின்னஞ்சல் டக்காஹிரோ காராசாவா என்ற பெயரில் வந்திருந்தது.

“எடுத்த எடுப்பில் பதறிப்போனோம்,” என்ற பல்கலைக்கழகப் பேச்சாளர் திரு லீ பியோங் ஹீ, காவல்துறைக்குப் பின்னர் புகார் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

காவல்துறை அதிகாரிகளும் தீயணைப்பாளர்களும் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்களில் ஒருவரான வெடிகுண்டைத் தகர்க்கும் நிபுணர் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

அதே நாள் வேறொரு பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் ஒரே ஒருவரிடமிருந்துதான் வருகிறது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்