சிட்னி: ஆஸ்திரேலியாவின் போண்டாய் கடற்கரையில் கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் குறித்து தனிப்பட்ட அரசாங்க விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் வியாழக்கிழமை (ஜனவரி 8) அறிவித்துள்ளார்.
அத்தகைய அரசாங்க விசாரணை ஆஸ்திரேலியாவில் ஆக வலுவான விசாரணையாகக் கருதப்படுகிறது.
டிசம்பர் 14ஆம் தேதி சிட்னியின் பிரபல போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
ஐஎஸ் கிளர்ச்சிக் குழுவின் சித்தாந்தத்தால் கவரப்பட்ட தந்தையும் மகனும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் அத்தகைய தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
சட்டங்களை இன்னும் கடுமையாக்கவேண்டும் என்றும் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்தவேண்டும் என்றும் மக்கள் கூறிவருகின்றனர்.
அரசாங்கம் நடத்தும் விசாரணையின்போது மக்கள் சாட்சியங்கள் அளிக்கும்படி உத்தரவிடப்படலாம். ஓய்வுபெற்ற நீதிபதி வர்ஜினியா பெல் விசாரணையை வழிநடத்துவார்.

