சிக்காகோ: அமெரிக்காவில் இயங்கும் ‘ஸ்டார்பக்ஸ்’ காப்பிக் கடைகளில் சிறந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு S$1,500 (US$1,200) மதிப்புள்ள ‘போனஸ்’ தொகை ஒரே ஆண்டில் கூடுதலாக வழங்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் கிளைகளில் சேவை மெதுவடைந்து, வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகப் புகார் எழுந்து விற்பனை பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த ஊக்கமளிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காப்பியுடன் உணவு வகைகளை வேகத்துடனும் கனிவுடனும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்துடன் இந்தத் தொகை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் அத்தகு சேவை வழங்கும் ஊழியர்கள், பாரிஸ்டாஸ் என்ற இத்தாலியப் பெயரில் அழைக்கப்படுகின்றனர்.
ஓர் ஆண்டுக்கான நிர்வாகச் செயலாக்கம், வாடிக்கையாளர் சேவை, மொத்த விற்பனை ஆகிய பலவகை இலக்குகளை எட்டும் கிளைகளில் பணியாற்றும் பாரிஸ்டாஸ்களுக்கும், மேலாளர்களுக்கும் கூடுதல் தொகை வழங்கப்படும்.
இதனை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது. ஜூலை மாதம் முதல் திட்டம் நடப்புக்கு வரும். முதல் காலாண்டுக்கான தொகை செப்டம்பர் மாதம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை மந்தநிலையை போக்கும் விதமாக பல மாற்றங்கள் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2024ஆம் ஆண்டு பதவியேற்ற பிரைன் நிக்கல், அவற்றை முன்னின்று நடத்திவருகிறார். வாடிக்கையாளர்களை வரவேற்கும் வடிவமைப்பு, சொகுசான இருக்கைகள், வேகமான சேவைத் திறன், வாடிக்கையாளர்களுடன் கனிவான பரிவர்த்தனை போன்று பலவற்றை அவர் அறிமுகப்படுத்தினார்.
அதன் பலனாக கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில் உலக அளவில் இயங்கும் முக்கிய ஸ்டார்பக்ஸ் கிளைகளில் முடிந்த காலாண்டில் 4 விழுக்காடு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாண்டு விற்பணை மிகச் சிறப்பாக இருக்கும் என்று நிறுவனம் கணித்துள்ளபோதும் முதலீட்டாளர்கள் தொடர் லாபத்தையே எதிர்பார்க்கின்றனர்.


