பேங்காக்: தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இருதரப்பும் நிறுத்தியுள்ள படைகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று தாய்லாந்தின் புதிய வெளியுறவு அமைச்சர் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) செய்தியாளர்களிடம் கூறினார்.
திரு சிகாசாக் ஃபுவாங்கெட்காவ் புதன்கிழமை (செப்டம்பர் 24) தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சராக அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றார். அவருடன் திரு அனுட்டின் சாய்ர்ன்விராக்குல் அந்நாட்டுப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
அதற்கு மறுநாள் திரு சிகாசாக், கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்க நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இருதரப்புக்கும் இடையே ஜுலையில் ஐந்து நாள்கள் நீடித்த போருக்குப் பிறகு போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டுவதே வெளியுறவு அமைச்சர் என்ற பொறுப்பில் தமது முக்கியப் பொறுப்பாகும் என்று அவர் செவய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இம்மாதத் தொடக்கத்தில் நடந்த கலந்துரையாடலில் தாங்கள் இணைந்து மேற்கொள்வதாக ஒப்புக்கொண்ட நடவடிக்கைகளை தாய்லாந்தும் கம்போடியாவும் செயல்படுத்தவேண்டும் என்று திரு சிகாசாக் சுட்டினார். எல்லைப் படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பது உள்ளிட்டவை அந்நடவடிக்கைகளில் அடங்கும்.
“படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான் அமைதிக்கு வழிவிடும். வன்முறை வெடிக்கும் அபாயத்தைக் குறைக்க எல்லைப் பகுதிகளிலிருந்து கனரக ஆயுதங்களை மீட்டுக்கொள்வது அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்,” என்றார் திரு சிகாசாக்.