கிள்ளான் துறைமுகக் கடற்பகுதியில் கவிழ்ந்த படகு; சிறுவன் உட்பட மூவர் மரணம்

1 mins read
6168ea8d-94f9-46cd-b340-3c463fcd13ac
மாயமான தம்பதியரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: தி ஸ்டார்

கிள்ளான் துறைமுகம்: மலேசியாவின் கிள்ளான் துறைமுகம் அருகில் உள்ள கடற்பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) படகு ஒன்று கவிழ்ந்தது.

இதில் மூவர் மாண்டனர்.

மாண்டோரில் 3 வயது சிறுவனான டேரன் கானும் அடங்குவான்.

டேரன் கானின் சடலத்துடன் 50 வயது திரு சியூ சொன் ஹின், 29 வயது திரு ஃபோங் யோங் சென் ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

சிறுவனின் பெற்றோரான 32 வயது திரு கான் ஹோன் டாட், 29 வயது திருவாட்டி கரீன் மான் ஆகியோரை இன்னும் காணவில்லை.

அவர்கள் கிள்ளான் உத்தாமாவைச் சேர்ந்தவர்கள்.

படகில் பயணம் செய்த ஆறாவது நபரான 17 வயது திரு ஆல்வின் சாங் யான் சின் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.

மாயமான தம்பதியரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு கானும் திருவாட்டி மானும் படகில் சிக்கியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகின் ஒரு பகுதி சேற்றில் புதையுண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.

சிலாங்கூர் கடல்துறை அமலாக்கப் பிரிவுக்குச் சொந்தமான மிதக்கும் படகுத் துறைக்கு அப்படகு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

படகு, கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்திருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்