கோலாலம்பூர்: மலேசியாவில் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 10 மணியளவில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
சிறுவனின் தாயார் தனது சகோதரி வீட்டுக்குச் செல்லும் வழியில் ஜாலான் தெலுக் கோங், கிள்ளானில் காரை நிறுத்திவிட்டுப் பொதுக் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றிருந்தார்.
அந்த காருக்குள் அப்போது, சிறுவனைத் தவிர்த்து அவனுடன் பிறந்த ஏழு வயதுப் பிள்ளையும் மலேசியாவைச் சேர்ந்த அவனது உறவினரின் பிள்ளையும் இருந்தனர்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த தாயார் காரையும் பிள்ளைகளையும் காணாமல் திடுக்கிட்டார்.
தாயார் கழிவறைக்குச் சென்றதும், அருகிலுள்ள கடைக்குச் செல்ல முடிவெடுத்த சிறுவன் அந்த ‘புரோட்டான் சாகா’ வகை காரை ஓட்டியதாகத் தெரிகிறது.
“சிறுவன் கிட்டத்தட்ட 2 கி.மீ. தொலைவிற்கு காரை ஓட்டிச் சென்றான். கடையை நெருங்கும் வேளையில் கார் அவனது கட்டுப்பாட்டை இழந்தது,” என்று காவல்துறை கூறியது.
சிறுவனும் அவனுடன் பிறந்த பிள்ளையும் ஐக்கிய நாட்டு நிறுவன ஆணையர் வழங்கும் அகதிகளுக்கான அட்டை வைத்திருப்பவர்கள் என்று அது குறிப்பிட்டது.
கார் சாலையிலிருந்து சறுக்கிச் சென்று அங்கிருந்த சாக்கடையில் விழுந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. காருக்கும் லேசான சேதம் மட்டுமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

