கழுத்தில் ஈட்டியோடு மிதிவண்டி ஓட்டி உதவி கோரிய சிறுவன்

கழுத்தில் ஈட்டியோடு மிதிவண்டி ஓட்டி உதவி கோரிய சிறுவன்

1 mins read
7a6ee7b3-f2fb-47b9-a4f6-b80ac17e1875
சிறுவனின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் அவசர அறுவை சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். - படங்கள்: தாய்லாந்து ஊடகம்

பேங்காக்: சாலை ஓரத்தில் மீன் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ஒன்றை 11 வயது சிறுவன் கண்டெடுத்தான். அதனுடன் விளையாடியபோது தவறுதலாக அதில் இருந்த ஈட்டி அச்சிறுவனின் கழுத்தில் பாய்ந்தது.

தாய்லாந்தின் நாக்கோன் ரட்சசிம்மா பகுதியில் இச்சம்பவம் மார்ச் 4ஆம் தேதி நடந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன.

சிறுவன் பள்ளிக்குச் சென்ற வழியில் அந்தச் சிவப்புநிற துப்பாக்கியைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அதைச் சிறுவன் சுட முயன்றபோது அதனுள் இருந்த ஈட்டி சிறுவனின் கழுத்தில் பாய்ந்துவிட்டது. வலியைப் பொறுத்துக்கொண்டு சிறுவன் மிதிவண்டியை ஓட்டிச் சென்று தன் ஊர்வாசிகளிடம் உதவி கோரினான்.

ஈட்டி ஆழமாகப் பாய்ந்திருந்தது என்றும் சிறுவனின் உயிருக்கு ஆபத்து என்றும் தொடக்கத்தில் கண்டறியப்பட்டதில் பெரிய மருத்துவமனைக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக சிறுவன் கொண்டுசெல்லப்பட்டான்.

சிறுவனின் பெற்றோர் பேங்காக் நகரில் வேலை செய்து வந்ததாகவும் சிறுவன் அவன் பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பள்ளிக்கூடத்திற்குத் தம் பேரன் சென்ற 10 நிமிடங்களில் ஊரே பரபரப்பாக இருந்ததைக் கவனித்த சிறுவனின் பாட்டி, அதற்குக் காரணம் தம் பேரன்தான் என்று பின்னர் உணர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்