மனிதக் கடத்தலில் சிக்கியோர் பிரேசிலின் சீனத் தொழிற்சாலையில் பணிபுரிவதாகத் தகவல்

மனிதக் கடத்தலில் சிக்கியோர் பிரேசிலின் சீனத் தொழிற்சாலையில் பணிபுரிவதாகத் தகவல்

2 mins read
c0d854d4-7f76-4e88-8d34-bd3b8ea3fc1e
பிரேசிலின் கெமகேரி என்னும் இடத்தில் கட்டப்பட்டு வரும் பிஒய்டி மின்வாகனத் தொழிற்சாலை. - படம்: ராய்ட்டர்ஸ்

ரியோ டி ஜெனீரோ: பிரேசிலில் உள்ள பிஒய்டி (BYD) சீனத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் மனிதத் கடத்தலில் சிக்கியோர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்த மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலை பிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ளது. அதன் கட்டுமானத் தளத்தில் வேலை செய்வோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

வேலை செய்வதற்காக அவர்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டதாக பிரேசிலிய தொழிலாளர் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (டிசம்பர் 26) கூறினர்.

அதனைத் தொடர்ந்து பிஒய்டி நிறுவனமும் அதன் குத்தகையாளரான ஜின்ஜியாங் குழுமமும் 163 ஊழியர்களுக்கு அடைக்கலம் தர முன்வந்து உள்ளன.

வேலை நியமனக் குத்தகை ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும் வரையில் ஹோட்டல்களில் அந்த ஊழியர்களை தங்க வைக்க அவை இரண்டும் ஒப்புக்கொண்டு உள்ளதாக பிரேசிலின் தொழிலாளர் துறை அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் தொழிலாளர் துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசியதாகவும் அறிக்கை தெரிவித்தது.

இருப்பினும், அது தொடர்பாகக் கருத்துக் கேட்கப்பட்டபோது பிஒய்டி உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

அதேபோல, ஜின்ஜியாங் குத்தகையாளரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனமும் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ஊழியர்கள் அடிமைகள் போல வேலை வாங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பாக அந்த நிறுவனங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.

இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மீண்டும் ஜனவரி 7ஆம் தேதி அதிகாரிகளைச் சந்திக்க இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்போது, பிரேசில் தொழிலாளர் துறை அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ள உடன்பாடு அவ்விரு நிறுவனங்களிடமும் முன்வைக்கப்படும் என்றது அறிக்கை.

குறிப்புச் சொற்கள்
பிரேசில்சீனாதொழிலாளர்