சீனாவிற்கு மணப்பெண்கள் கடத்தல்; இந்தோனீசியாவில் இருவர் கைது

சீனாவிற்கு மணப்பெண்கள் கடத்தல்; இந்தோனீசியாவில் இருவர் கைது

படம்: ஜகார்த்தா போஸ்ட்

15 Nov 2026 - 1:05 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியப் பெண்களைச் சீன ஆடவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் மணப்பெண் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மேற்குக் கலிமந்தானில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

42 வயது எல், 36 வயது எல்கேஎஸ் எனக் குறிப்பிடப்பட்ட அந்த இல்லத்தரசிகள் இருவரும் அத்தகைய நான்கு திருமணங்களுக்கு ஏற்பாடு செய்ததாகக் காவல்துறை மூத்த ஆணையர் ருஸ்டியானி கூறினார்.

அப்படிச் சீனாவிற்கு அனுப்பப்பட்ட பெண்கள் இருவர்க்குத் திருமணம் முடிந்த நிலையில், மேலும் இருவரை அனுப்பும் முயற்சிகள் தடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூர்வாசிகள் அளித்த தகவலையடுத்து, கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் சீனாவில் இருக்கும் ஆடவரைத் திருமணம் செய்யப் புறப்பட்ட 19 வயதுப் பெண்ணைக் காவல்துறையினர் குபு ராயா வட்டாரத்திலுள்ள சுப்பாடியோ அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர்.

ஜகார்த்தா அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட வேறொரு மணப்பெண்ணுக்குப் பதிலாக அப்பெண் சேர்க்கப்பட்டிருந்தார்.

திருமண நிச்சயதார்த்த ஏற்பாட்டின்கீழ் அப்பெண்ணுக்குத் தங்க மோதிரங்கள், தங்க வளையல்கள், 30 மில்லியன் ரூப்பியா (S$2,110) ரொக்கம் உள்ளிட்டவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

அத்திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காகச் சந்தேகப் பேர்வழிகள் இருவர்க்கும் ஆளுக்கு 1.5 மில்லியன் ரூப்பியாவுடன் சீனா செல்வதற்கு இலவச விமானப் பயணச்சீட்டும் தங்குமிடமும் வழங்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

தற்போது தடுப்புக்காவலில் உள்ள இருவரும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மணப்பெண் கடத்தல் குறித்துக் கருத்துரைத்த தஞ்சுங்புரா பல்கலைக்கழகப் பாலின, அரசியல் சமூகவியல் வல்லுநர் சியாரிஃபா ரகுமானியா, வேலைவாய்ப்பின்மை, நிதி நெருக்கடி போன்ற சமூக, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள் சுரண்டலுக்கு ஆளாவதாகச் சுட்டினார்.

ஆட்கடத்தல் என்பது கடத்தல் அல்லது உடல்சார்ந்த வன்முறையை மட்டும் குறிப்பதன்று என்றும் இதுபோன்ற திருமணங்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமை, கட்டாய உழைப்பு, நடமாட்டக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தப்படுதல் போன்ற இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, சீனாவுக்கு அனுப்பப்பட்ட பெண்களின் தற்போதைய நிலையை அறிய முடியவில்லை என்றும் அச்சம்பவங்களில் வேறு யார்க்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் திரு ருஸ்டியானி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்