லண்டன்: ரஷ்யாவுக்குச் சாதகமாய்ப் பொய்த் தகவல்களைப் பரப்புவதாகக் கூறிச் சில நிறுவனங்களுக்கு எதிராகப் பிரிட்டன் புதன்கிழமை (டிசம்பர் 9) தடைகளை விதித்துள்ளது.
அவற்றுடன் பிரிட்டனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிராக இணைய மிரட்டல்களை விடுத்த சந்தேகத்தின் பேரில் சீனாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“ஐரோப்பா முழுதும் நேரடியாகவும் இணையத்தின் மூலமாகவும் மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. எங்களின் ஜனநாயகத்தை நிலைகுலையச் செய்வதும் நலன்களைக் கீழறுப்பதுமே அவற்றின் நோக்கம். தீய எண்ணம் கொண்ட வெளிநாடுகளின் நலனுக்காக அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தின் கொள்கை அறிக்கையொன்று தெரிவித்தது.
தடை அறிவிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று ரஷ்யாவின் ரிபார். அதன் டெலிகிராம் ஊடகம், 28 மொழிகளில் உலகெங்கும் மில்லியன் கணக்கானோரை எட்டுவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் அவெட் கூப்பர் கூறினார்.
அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலக நடப்புகளைக் கிரெம்ளினுக்குச் சாதகமாய் வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ரிபார், உண்மை முகத்தை மறைத்துச் செயல்படுவதாகச் சொன்ன திருவாட்டி கூப்பர், அந்நிறுவனத்திற்கு ரஷ்ய அதிபரின் நிர்வாகம் குறிப்பிட்ட அளவு நிதி கொடுப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்க நிறுவனங்களும் அதற்கு நிதியுதவி அளிப்பதாகவும் ரஷ்ய வேவுத் துறையுடன் அது பணிபுரிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிராவ்ஃபோண்ட் அறநிறுவனத்திற்கு எதிராகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வேவு அமைப்பு ஒன்றுக்கு அது உதவியதாகத் திருவாட்டி கூப்பர் சொன்னார்.
சீனாவைத் தளமாகக் கொண்ட ஐ-சூன், இன்ட்டெகிரிட்டி டெக்னாலஜி குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் லண்டன் தடைகளை அறிவித்துள்ளது. பிரிட்டனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிரான இணைய நடவடிக்கைகளின் காரணமாகத் தடை விதிக்கப்படுவதாகத் திருவாட்டி கூப்பர் குறிப்பிட்டார்.


