லண்டன்: பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் தமது அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சைச் சேர்த்துள்ளார்.
அத்துறையின் அமைச்சராக 36 வயது கனிஷ்கா நாராயணை அவர் நியமித்துள்ளார்.
இதன்மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கென அமைச்சு அமைக்கப்படுவது இதுவே முதல்முறை.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பிறந்த கனிஷ்கா நாராயண், தமது 12 வயதில் கனிஷ்கா இங்கிலாந்து சென்றார்.
இதற்குமுன் பிரதமராக இருந்த கியர் ஸ்டார்மரின் ஆட்சியில், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்புக்கான துணை அமைச்சராக கனிஷ்கா நாராயண் செயல்பட்டார்.
அப்போது தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த லிஸ் கெண்டாலின்கீழ் கனிஷ்கா நாராயண் பணியாற்றினார்.
தமது அமைச்சரவையிலிருந்து லிஸ் கெண்டால் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலரைத் திரு பர்ன்ஹாம் நீக்கிவிட்டார்.
மேலும், அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையைக் கலைத்து, அதை வர்த்தக அமைச்சுடன் அவர் இணைத்துவிட்டார்.
வர்த்தகம், புத்தாக்கம், அறிவியல் துறை அமைச்சராக ஜோனத்தன் ரெனால்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலாசாரத் துறையும் விரிவாக்கப்பட்டுள்ளது. மின்னிலக்கம், இணையப் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களைக் கலாசார அமைச்சு மேற்பார்வையிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனின் ‘ஏஐ’ வியூகம் பிற நாடுகளாலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. முன்னணி ஏஐ நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் என பல தொழில்நுட்ப நிறுவனங்களும் பிரிட்டனின் கொள்கைகளைத் தொடர்ந்து கவனித்து வருகின்றன.

