தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிரந்தரவாசம் வழங்குவதைக் கட்டுப்படுத்த பிரிட்டன் திட்டம்

2 mins read
3252cd42-034c-4ad1-a2ce-1cb592175417
பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சபானா மகமுத். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டனுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தரவாசம் வழங்குவதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

நிரந்தரவாசத்திற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கினால் குடியேறிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிரந்தரவாசத்திற்காக விண்ணப்பம் செய்பவர்கள் பிரிட்டன் சமூகத்திற்கு எந்த வகையில் உதவுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அவர்களுக்கு நிரந்தரவாச உரிமை கொடுக்கப்படும் என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சபானா மகமுத் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தார்.

பிரிட்டனில் நாளுக்கு நாள் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. அதைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

தற்போதைய விதிமுறைப்படி பிரிட்டனில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கினால் அவர்கள் நிரந்தரமாக அந்நாட்டில் வசிக்க அனுமதி உண்டு.

குற்றச் செயலில் ஈடுபடாத, சமூகப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக, சலுகைகளை எதிர்பார்க்காத நபர்களுக்கு நிரந்தரவாசம் கொடுக்கும் விதிமுறைகளை வகுத்து வருகிறோம் என்று சபானா கூறினார்.

மேலும் நிரந்தரவாசத்திற்கு விண்ணப்பிக்கும் குடியேறிகள் ஆங்கில மொழியை நன்றாகப் பேசவும் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இவ்வாண்டு இறுதிக்குள் அது அறிவிக்கப்படலாம் என்று சபானா கூறினார்.

இந்நிலையில், குடியேறிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்று கூறுபவர்களைக் கண்டித்தார். குடியேறிகளை வெளியேற்றினால் நாடு பல துண்டுகளாகப் பிரியும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஒவ்வொரு முறையும் பிரிட்டனில் தேர்தல் நடக்கும்போது குடியேற்றம் தொடர்பாக அதிகம் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதாக அறிவித்தது. அப்போது வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்