லண்டன்: பிரிட்டன், தஞ்சம் புகுவோருக்கான கொள்கையைப் பெரிய அளவில் மாற்றியமைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
நவீன காலத்தில் அகதிகளுக்கான கொள்கையில் செய்யப்படவிருக்கும் மாற்றம் மிகப் பெரியதாக இருக்கும் என்று லண்டன் சனிக்கிழமை (நவம்பர் 15) தெரிவித்தது. அண்மையில் டென்மார்க் அத்தகைய அணுகுமுறையைக் கையிலெடுத்தது. பிரிட்டன் இப்போது அதனைப் பின்பற்றுகிறது. ஐரோப்பாவில் மிகக் கடுமையான ஒன்றாகப் பார்க்கப்படும் அதனை மனித உரிமைக் குழுக்கள் பரவலாகக் குறைகூறுகின்றன.
பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம், அதன் குடிநுழைவுக் கொள்கைகளைக் கடுமையாக்கி வருகிறது. முக்கியமாக, பிரான்சிலிருந்து சட்டவிரோதமாகச் சிறிய படகுகளின் மூலம் வருவோருக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பிரிட்டன் சீர்திருத்தக் கட்சி, குடிநுழைவுக் கொள்கையில் பரிந்துரைக்கும் அம்சங்களுக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது. அந்தக் கட்சி, நாட்டில் தஞ்சம் புகுவோர் குறித்த கொள்கையைக் கடுமையாக்குவதற்கு அரசாங்கத்தை நெருக்குகிறது.
மாற்றங்களின்படி, குறிப்பிட்ட அகதிகள் சிலருக்கு வீடு, வாராந்தரப் படித்தொகை உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கும் திட்டம் அகற்றப்படும். உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
நல்ல உடல், மன நிலையில் இருந்துகொண்டு வேலை செய்யாமல் உள்ளோர்க்கும் சட்டத்தை மீறுவோர்க்கும் புதிய மாற்றங்கள் பொருந்தும் என்று உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூட் தெரிவித்தார்.
அகதிகளுக்கான உதவித்திட்டங்களுக்கு வரிசெலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படுகிறது. எனவே நிதி ஆதரவை வழங்குவதில் பொருளியலுக்கும் உள்ளூர்ச் சமூகங்களுக்கும் பங்களிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.
புதிய நடவடிக்கைகள் குறித்த மேல் விவரங்களைத் திருவாட்டி மஹ்மூட் திங்கட்கிழமை (நவம்பர் 17) வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோதக் குடியேறிகள், பிரிட்டனைத் தெரிவுசெய்வதற்கான சாத்தியத்தைக் குறைக்கவும் அத்துமீறி நுழைவோரை வெளியேற்றும் பணிகளை எளிதாக்கவும் உதவுகின்ற வகையில் புதிய நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
“ஆபத்தைக் கண்டு அஞ்சி அடைக்கலம் நாடுவோருக்குப் புகலிடம் கொடுத்த பெருமை மிகு பாரம்பரியம் இந்நாட்டிற்கு உண்டு. ஆனால் எங்களின் பெருந்தன்மையால் அநேகர் வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை உள்நாட்டுச் சமூகங்களுக்கு அதிக நெருக்குதலைக் கொடுக்கின்றன,” என்றார் திருவாட்டி மஹ்மூட்.
பிரிட்டனில் 2025 மார்ச் மாதத்துடன் முடிவுற்ற ஓராண்டில் 109,343 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 17 விழுக்காடு அதிகம். அகதிகள் எண்ணிக்கை உச்சத்தில் இருந்த 2002ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 6 விழுக்காட்டுக்கும் மேல். அப்போது புகலிடம் நாடியோரின் எண்ணிக்கை 103,081.


