ஜிப்ரால்டர்: ஈரானுடன் நடக்கும் போரில் உதவிகள் வழங்காத ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக பிரிட்டனை விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் விதமாக பிரிட்டன் முக்கிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய கிழக்குப் பூசலின்போது ஏற்கெனவே அதன் விமானத் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கியதோடு, அவ்வட்டாரத்தில் பல தற்காப்பு செயல்பாடுகளுக்குப் பிரிட்டன் அதன் சொந்த போர் விமானங்களைப் பயன்படுத்தியது.
தற்போது, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்க வாய்ப்புள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட பிரிட்டன் அதன் போர்க் கப்பல்களை அங்கு அனுப்பிவைத்துள்ளது. தாக்கி அழிக்கக்கூடிய அதிநவீனக் கப்பல் ஒன்றும் கடலில் கன்னி வெடிகளைத் தன்னிச்சையாக அகற்றும் கப்பலும் மத்திய கிழக்கை நோக்கிப் பயணம் செய்கின்றன.
அதிபர் டிரம்ப்பின் குறைகூறலைத் தவிர்க்க இந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஸ்பெயினுக்கு அருகில் உள்ள ஜிப்ரால்டர் என்ற பகுதிக்கு அதன் ராணுவத் தளவாடங்களைச் சுற்றிப் பார்வையிட சில செய்தியாளர்களை சனிக்கிழமை (மே 23) பிரிட்டன் தற்காப்பு அமைச்சு அழைத்துச் சென்றது.
முன்னெப்போதும் இல்லாத அளவு மத்திய கிழக்கில் அதன் போர் விமானங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்கு அவர்களிடம் பேசிய ராணுவப் படையின் துணை அமைச்சர் அல் கார்ன்ஸ் விளக்கினார். நூற்றுக்கணக்கில் அங்கு ஆளில்லா வானூர்திகள் (ட்ரோன்) சுட்டு வீழ்த்தப்பட்டதையும் அவர் சுட்டினார்.
பல நாடுகளை இணைத்த மாநாடு
சிக்கல் நிறைந்த நீரிணை பிரச்சினைக்குத் தீர்வு காண அண்மையில் 40 நாடுகளை ஒருங்கிணைத்து பிரிட்டன் முன்னின்று மாநாடு நடத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்நிலையில் உலகின் ஐந்தில் ஒருபங்கு எரிபொருள், எண்ணெய் விநியோகம் கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையில் ஏறத்தாழ 850 கப்பல்களும் 20,000 மாலுமிகளும் தொடர்ந்து சிக்கியிருப்பது கவலைக்குரியதாக உள்ளது.

