லண்டன்: பிரிட்டனில், வறுமை நிலை இதுவரை இல்லாத அளவு தலைதூக்கியுள்ளதாக ஜோசஃப் ரவுன்ட்ரீ அறநிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அங்கு ஏறக்குறைய 6.8 மில்லியன் பேர் தற்போது கடுமையான வறுமையில் வாழ்வதாகக் குறிப்பிட்ட அறிக்கை, கடந்த 30 ஆண்டுகளில் பதிவான எண்ணிக்கையில் இதுவே ஆக அதிகம் என்றது.
வீட்டுக் கடன், வீட்டுக்கான மற்ற செலவுகள் போக வருமானத்தில் எஞ்சியுள்ள தொகை பிரிட்டனின் சராசரி வருமானத்தைவிட 40 விழுக்காட்டுக்கும் கீழ் இருந்தால் கடுமையான வறுமை எனக் கருதப்படுகிறது.
அதன்படி இரண்டு இளம் பிள்ளைகள் கொண்ட தம்பதியிடம் எஞ்சிய ஆண்டு வருமானம் 16,400 பவுண்ட் அதாவது $28,500 சிங்கப்பூர் வெள்ளிக்குக் கீழ் இருந்தால் அவர்கள் மோசமான வறுமையில் இருப்பதாக எண்ணப்படுவர்.
பிரிட்டனில் உள்ள வறுமை நிலையை மாற்றும் நோக்கில் ஜோசஃப் ரவுன்ட்ரீ அறநிறுவனம் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த வறுமை நிலை மேம்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டிலிருந்து 1995ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட வறுமை நிலை 24 விழுக்காட்டிலிருந்தது. அது, 2023ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 21 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
ஆனால், மிகவும் கடுமையான வறுமை நிலை 8லிருந்து 10 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளதை அறிக்கை சுட்டியது.
வறுமையில் வாடும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியது. தற்போது 4.5 மில்லியன் பிள்ளைகள் வறுமையில் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அதிகபட்சம் இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் நலன் காக்கும் மானியம் வழங்கப்படும் என்ற முடிவை நிதியமைச்சர் ரேசல் ரீவ்ஸ் கடந்த ஆண்டு நவம்பரில் ரத்துசெய்ததை ஜோசஃப் ரவுன்ட்ரீ அறநிறுவனம் வரவேற்றது.
வறுமையில் உள்ள பிள்ளைகளுக்கு உதவ ஏறக்குறைய 1.3 பில்லியன் பவுண்ட் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
2017ஆம் ஆண்டு அதிகபட்சம் இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் நலன் காக்கும் மானியம் வழங்கப்படும் என்று கன்சர்வேட்டிவ் அரசாங்கம் அறிவித்ததால் மூன்றாவதிலிருந்து பிறக்கும் பிள்ளைகளுக்கு உதவி கிடைக்காமல் போனது.

