தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்கள் ஆபாசப் பதிவுகளைப் பார்க்காமல் தடுக்க தொழில்நுட்பச் சட்ட மசோதாவைக் கடுமையாக்குகிறது பிரிட்டன்

1 mins read
8514314f-ff8e-4d1f-bfe4-116ab50e1b57
ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் வெளியிடும் தளங்களில் பார்வையாளரின் வயதைச் சரிபார்க்கும் முறைக்கு உயர் தரநிலை உருவாக்கப்படும் என்று பிரிட்டன் கூறியுள்ளது. - கோப்புப் படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 லண்டன்: இணையப் பாதுகாப்புச் சட்ட மசோதாவைக் கடுமையாக்கியிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் சிறுவர்கள் பார்க்காமல் தடுக்க அது வழிவகுக்கும்.

நாட்டின் தொழில்நுட்பத் துறை நீண்ட காலமாக அணுக்கமாகக் கவனம் செலுத்திவரும் அந்தச் சட்ட மசோதாவில் திருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் வெளியிடும் தளங்களில் பயனாளரின் வயதைச் சரிபார்க்கும் முறைக்கு உயர் தரநிலை உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் பயனாளர் சிறுவரா என்பதை இணையத்தளங்கள் திறம்பட உறுதிசெய்ய முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தையும் மற்ற நாடுகளையும்போலவே பிரிட்டனும் கருத்துச் சுதந்திரத்துக்கு இடையூறு நேராவண்ணம் சமூக ஊடகப் பயனர்களை, குறிப்பாக சிறுவர்களை, தீய பதிவுகளில் இருந்து பாதுகாக்கப் போராடி வருகிறது.

புதிய சட்டத்தின்கீழ், தங்கள் தளத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களைத் தீய பதிவுகளில் இருந்து பாதுகாப்பது அந்தத் தளத்தின் உயர்நிர்வாக அதிகாரிகளின் தனிப்பட்ட பொறுப்பாகும். அவர்கள் அதை செய்யத் தவறினால், சிறைத்தண்டனை விதிக்கவும் வாய்ப்புண்டு.

இணையப் பாதுகாப்பு தொடர்பான மசோதா இன்னும் சில மாதங்களில் சட்ட அங்கீகாரம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்