தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெட்ரோல் வாகன விற்பனைத் தடை: பிரிட்டன் உறுதி

2 mins read
869f5829-25a4-4588-a33a-0667a1687964
2030ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்குத் தடை விதிப்பதில் பிரிட்டி‌‌ஷ் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு 2030ஆம் ஆண்டு முதல் தடை விதிப்பதில் பிரிட்டி‌‌ஷ் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகக் குடியிருப்பு அமைச்சர் மைக்கல் கோவ் செவ்வாய்க்கிழமை கூறினார்.

இந்தக் கொள்கையில் பிரதமர் ரி‌ஷி சுனக் உறுதியாக இல்லாததுபோல் அண்மையில் தோன்றியதைத் தொடர்ந்து, மின்சார வாகனத் தொழில்துறையின் முதலீட்டாளர்களுக்கு மறுஉறுதி அளித்திருக்கிறார் திரு கோவ்.

இதுபற்றி ஒளிபரப்பாளர்கள் திங்கட்கிழமை கேட்டபோது, பிரதமர் சுனக் உறுதியான பதில் அளிக்கவில்லை. மற்றோர் அமைச்சரான ஆண்ட்ரூ மிட்செலும் காலக்கெடு குறித்து ஐயம் எழுப்பினார்.

ஆனால், தடைக்கான காலக்கெடு நிலையானதுதானா என்று டைம்ஸ் வானொலி செவ்வாய்க்கிழமை கேட்டபோது, குடியிருப்பு அமைச்சர் மைக்கல் கோவ், “ஆமாம்,” என்று பதில் அளித்தார். முழு உத்தரவாதம் உள்ளதா என்று ஸ்கை நியூஸ் பின்னர் கேட்டபோதும், திரு கோவ் அதே பதிலை அளித்தார்.

ஆனால், வீடுகளில் உள்ள சூடேற்றும் சாதனங்களைச் சுற்றுப்புறத்திற்கு உகந்த சாதனங்களாக மாற்றுவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் மறுஆய்வு செய்யக்கூடும் என்று திரு கோவ் கூறினார்.

புதிய வீடுகள் அனைத்திலும் 2025 முதல் எரிவாயுக் கொதிகலன்களுக்குப் பதிலாக சூடேற்றும் கருவி பயன்படுத்தப்படவேண்டும். இது மறுஆய்வு செய்யப்படலாம் என்றார் அவர்.

சென்ற வாரம் நடந்த சிறப்புத் தேர்தலைத் தொடர்ந்து, 2050ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனின் கரியமிலவாயு வெளியாக்கத்தை முற்றிலும் நிறுத்துவதற்கான உறுதிமொழிகளைக் குறைத்துக்கொள்ள தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து திரு சுனக் நெருக்குதலை எதிர்நோக்கினார்.

2030ல் வரவிருக்கான பெட்ரோல் வாகனங்களுக்கான தடையையும், அரசாங்கத்தின் தாராளமான மானியத்தையும் சார்ந்தே, டாட்டா குழுமம் பிரிட்டனில் புதிய மின்சாரக் கார் மின்கல ஆலையில் $6.8 பில்லியன் (4 பில்லியன் பவுண்டு) முதலீடு செய்ய சென்ற வாரம் தீர்மானித்தது. இதுபோன்ற பெரிய தொழிற்சாலைகளை பிரிட்டனில் அமைக்க இன்னும் பல நிறுவனங்களை பிரிட்டி‌‌ஷ் அரசாங்கம் ஈர்க்க முயல்கிறது.

குறிப்புச் சொற்கள்