லண்டன்: உக்ரேனுக்கான ஆதரவு தொடரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்னம் உறுதிகூறியிருக்கிறார். உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைத் திங்கட்கிழமை (ஜூலை 27) சந்திப்பதற்கு முன்னர் அவரின் கருத்து வந்துள்ளது.
பிரதமராகப் பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, திரு பர்னமைச் சந்திக்கவிருக்கும் முதல் அனைத்துலக விருந்தினர் அதிபர் ஸெலென்ஸ்கி.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வலுவான உறவை அது பிரதிபலிப்பதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
தலைவர்கள் இருவரும் பிரிட்டிஷ் கடற்படைத் தளத்தைப் பார்வையிடுவார்கள். பிரிட்டனின் ‘ஸ்டோன் குளோக்’ எனும் அதிநவீன மின்னணுப் போர்க் கட்டமைப்புத் தொழில்நுட்பத்தின் மதிநுட்பச் சொத்துரிமையை உக்ரேனுடன் பகிர்ந்துகொள்வது குறித்துத் திரு பர்னம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பிரிட்டன் உக்ரேனுடன் தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கிறது, எங்கள் ஆதரவு என்றும் மாறாதது. எங்கள் மனஉறுதி பற்றி ரஷ்யாவுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது; உக்ரேனுக்கு நிலையான, நியாயமான அமைதி கிடைக்கும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்,” என்று அவர் சொன்னார்.
‘ஸ்டோன் குளோக்’ என்பது பிரிட்டனின் சொந்தக் கண்டுபிடிப்பு என்றும் போர்க்களத்தில் நிரூபிக்கப்பட்ட சிறந்த தொழில்நுட்பம் என்றும் திரு பர்னம் கூறினார். இது இரு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த மின்னணுக் கருவிகள், மடிக்கணியின் அளவைப் போன்றிருக்கும். அவை ஆளில்லா வானூர்திகளில் பொருத்தப்பட்டிருக்கும். எதிரிகளின் ரேடார் கண்டறிவதைத் தடுக்கும் வகையில் இந்தக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உக்ரேனியப் படைகளின் ஆளில்லா வானூர்திகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரிட்டனின் தற்காப்பு அமைச்சு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான இத்தகைய சாதனங்களை அதற்கு வழங்கியுள்ளது.
உக்ரேனில் இந்த மின்னணுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் அடுத்த தலைமுறை நெடுந்தொலைவு ஆயுதங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் இணைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

