லண்டன்: காஸாவின் அவலநிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் பாலஸ்தீனத்தைத் தனி நாடாய் அங்கீகரிக்கப்போவதாக பிரிட்டன் கூறியுள்ளது. செப்டம்பரில் அவ்வாறு செய்யப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
மற்ற சில நிபந்தனைகளையும் இஸ்ரேல் நிறைவேற்றியாக வேண்டும் என்றார் அவர். சண்டை நிறுத்தத்திற்கு இணங்க வேண்டும்; இரு நாட்டுத் தீர்வை முன்வைக்கும் நீடித்த அமைதிக்கு உறுதிகூற வேண்டும்; உதவிப்பொருள்களின் விநியோகத்தை ஐக்கிய நாட்டு நிறுவனம் மீண்டும் தொடங்க அனுமதியளிக்க வேண்டும். இல்லையென்றால் பிரிட்டன் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் நடவடிக்கை எடுக்கும் என்றார் திரு. ஸ்டார்மர்.
பிரிட்டனின் அறிவிப்பு, ஹமாசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெகுமதியளிப்பதைப் போன்றது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசாங்கம், பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் என்பது அமைதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் வரவேண்டும் என்று கூறியிருந்தது.
இருப்பினும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரின் கடும் நெருக்குதலால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் திரு ஸ்டார்மர்.
சென்ற வாரம் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக வரும் செப்டம்பரில் அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் கூறியிருந்தது.
காஸாவின் தற்போதைய நிலவரத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார் திரு ஸ்டார்மர். அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது பிரிட்டிஷ் பிரதமர் அந்த விவரங்களை வெளியிட்டார். தன்னாட்சி பெற்ற பாலஸ்தீன நாட்டுக்கு அருகில் பாதுகாப்பான இஸ்ரேலைக் காணவேண்டும் என்பது பிரிட்டனின் இலக்கு. பிரிட்டனின் நோக்கம் முன்னெப்போதையும்விட இப்போது கடும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகத் திரு. ஸ்டார்மர் சொன்னார்.
கிட்டத்தட்ட 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அதிகாரபூர்வமாகத் தனி நாடாய் அங்கீகரிக்கின்றன.